இந்தியா

தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும்! ஆதவ் அர்ஜூனா உறுதி

Published

on

2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை தவெக அப்புறப்படுத்தும் என்று ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “இந்தியாவில் தேசியக் கட்சி ஒற்றை ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றிகண்டவர். இளைஞர் படையின் துணையோடு முதன்முதலாக மாநிலக் கட்சித் தலைமையிலான ஆட்சியை உருவாக்கியவர்.

மாநில சுயாட்சியின் நாயகர். இருமொழிக் கொள்கையின் சிற்பி. பண்ணையார் அரசியலை ஒழித்து, சாமானிய அரசியலை நிறுவிய மக்கள் தலைவர்.

இன்றுவரை, தமிழ்நாடு அரசியலின் திசைவழியாக இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றுவோம்.

1967-ம் ஆண்டு அண்ணா அடைந்த மகத்தான வெற்றி பண்ணையார் ஆதிக்கத்தைத் தகர்த்த அந்த வரலாற்று நிகழ்வைப் போல, இன்றைய பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை நம்மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2026-ம் ஆண்டு சாமானிய-எளிய மக்களுக்கான ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் அளித்து புதிய வரலாற்றைப் படைக்கும்.

அண்ணாவின் அறிவுரையான “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி” என்கிற வழியில், நம் தலைவர் சுட்டிக்காட்டியது போல ‘மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்து’ ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

அதற்கான சூழல் இப்போது நமக்கு அமைந்துள்ளது. அண்ணாவின் நினைவுநாளில், அந்த சூளுரையையே நம் வெற்றிப் பயணத்திற்கான உறுதியாக ஏற்றுப் பயணிப்போம்!” என்று கூறியுள்ளார்.

Exit mobile version