செய்திகள்

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு : ஒத்துக்கொண்டார் சிவஞானம்

Published

on

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு : ஒத்துக்கொண்டார் சிவஞானம்

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சி பிரிந்து தான் நிற்கும் என வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவருமான சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”பொது வேட்பாளர் என்பது தான் எமது பிரச்சினை அரியநேத்திரன் (Ariyanethran) என்பது இரண்டாவது பிரச்சினை.

ஜனாதிபதி தேர்தல் குறித்து நாங்கள் இன்னமும் முடிவெடுக்கவில்லை. காரணம் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் மூன்று பேரை தான் நாங்கள் கணிக்கலாம். அவர்களுடைய விஞ்ஞாபனம் இன்னமும் வெளியாகவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கில் நிரந்தரமாக மாற்றப்பட முடியாத அல்லது மீளப்பெற முடியாத அதிகாரங்களைக் கொண்ட ஒரு சமஷ்டிக் கட்டமைப்பை கோருகின்றோம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லியுள்ளோம். இவற்றைப் பரசீலிப்பதற்காக நாங்கள் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

கட்சியில் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றது. சிறீதரன் ஆரம்பத்திலேயே தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். அதேநேரம் மூத்த துணைத் தலைவரான நான் ஆதரிக்கவில்லை.

இது சாத்தியமற்றது, வேட்பாளர் தெரிவில் பிரச்சினை வரும், நாங்கள் ஏற்கனவே நிரூபித்த ஆணை அல்லது மக்கள் அங்கீகாரத்தை மலினப்படுத்தும் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

பொது வேட்பாளர் விடயத்தில் தனிமுடிவுக்கு வர மாட்டோம். கட்சி இதுவரையில் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. அவ்வாறு முடிவு எடுத்தாலும் நான் என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டேன்.“ என தெரிவித்துள்ளார்.

Exit mobile version