இந்தியா

அரசைப் பொதுவாக நடத்துங்கள்.. பழிவாங்காதீர்! மோடிக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

Published

on

அரசைப் பொதுவாக நடத்துங்கள்.. பழிவாங்காதீர்! மோடிக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் இந்திய பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 -வது முறை ஆட்சியமைத்து தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 7 -வது பட்ஜெட் இதுவாகும்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களை தவிர கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

மேலும், ஒன்றரை மணிநேரம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

பிரதமர் மோடியே “தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்” என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய பட்ஜெட் உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version