இந்தியா

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும்

Published

on

இந்தியா திரும்பிய இலங்கையர்களின் அவலநிலைக்கு தீர்வு வேண்டும்

இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியவர்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு, தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் இன்று கோரியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பிய மனுவில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாட்டில் வைத்து சங்கத்தின் பிரதிநிதிகள் ராகுல் காந்தியிடம் இந்த மனுவை அளித்துள்ளனர்.

நாடு திரும்பிய நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல், சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்ற குழு ஒன்றை அமைத்தல் மற்றும் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை இந்த மனுவில் சங்கப்பிரதிநிதிகள் பட்டியலிட்டுள்ளனர்.

இந்திய அரசின் முழு மறுவாழ்வு வாக்குறுதியின் கீழ் இந்தியாவுக்கு வந்த இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், முறையாக மறுவாழ்வு அளிக்கப்படாததால், சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் தீவுகளில் சுமார் 25 இலட்சம் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.

அவர்களின் பிரச்சினைகளையும் உரிமைகளையும் தீர்க்க இந்திய நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் தேவை. எனவே இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குறித்த மனுவில் தமிழ்நாடு, நீலகிரியைச் சேர்ந்த விவசாயிகள் தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version