இந்தியா
பண மோசடியில் இந்திய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது
பண மோசடியில் இந்திய கிரிக்கட் வீரரின் சகோதரர் கைது
இந்தியாவின் முன்னணி கிரிக்கட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியாவை இந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4.2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17ஆவது ஐ.பி.எல். (ஐபிஎல் ) டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியை தலைவராக ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், 4.5 கோடி மோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 இல் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து தனியார் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழங்கப்பட்ட நிறுவனத்திற்கான பணம் சரியானமுறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை எனவும் நிறுவனத்தின் விற்பனை அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை பொருளாதார குற்றப் பிரிவு பொலிஸிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மொத்தமாக 4.2 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, வைபவ் பாண்டியா மீது மோசடி வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை இன்று (வியாழக்கிழமை) கைது செய்துள்ளனர்.