அரசியல்
மனித புதைகுழி ஆவணங்களை அழித்த கோட்டா – அம்பலமான சதிச்செயல்..!
சிறிலங்கா இராணுவத்தின் அதிகாரியாக தாம் இருந்த காலப்பகுதிக்குரியது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் காவல்துறை பதிவுகளை சிதைத்தார் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மனித புதைகுழிகளை தோண்டியெடுப்பதில் கோட்டாபய ராஜபக்சவின் பங்கு அரசியல் தலையீட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன கூறியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்த போது, 1989 ஆம் ஆண்டுகளில் இரத்தக் களரிமிக்க மார்க்சிச கிளர்ச்சி உச்சக் கட்டத்தில் இருந்துடன், அந்தக் காலப் பகுதிக்குரியது என கூறப்படும் மனித புதைகுழிகள் கண்டறியப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையின் மத்திய மாகாணமான மாத்தளை மாவட்டத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து காவல்துறை பதிவுகளையும் அழிக்குமாறு அப்போதைய பலம்வாய்ந்த பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங்களில் சுமார் 20 பாரிய புதைகுழிகளை தோண்டியதில் நூற்றுக்கணக்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் மற்றும் இலங்கையில் ஜனநாயகம் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு ஆகியன கூறியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களது உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல்லாயிரக்கணக்கான எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்படலாம் என்றும் அந்த அமைப்புக்கள் அச்சம் வெளியிட்டுள்ளன.
விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்களால் நிறுவப்பட்ட பல விசாரணை ஆணைக்குழுக்களில் எதுவுமே, பாரிய புதைகுழிகள் பற்றி ஆராய கட்டளையிடவில்லை என்பதுடன், மாறாக, உண்மையை வெளிக்கொணரும் முயற்சிகள் தடை ஏற்படுத்தப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, நீதிபதிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், குடும்பங்களின் சட்டத்தரணிகளுக்கு இடங்களிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உயிருள்ள சாட்சிகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதுடன், பிரேதப் பரிசோதனை தரவுகள் சேகரிக்கப்படவில்லை எனவும் மிகவும் அரிதான ஒருவர் தண்டிக்கப்பட்ட போதிலும் பின்னர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மனித புதைகுழி தொடர்பான தரவுகளை அழித்தமை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login