செய்திகள்
வட்டுவாகல் கோட்டாபாய கடற்படை மீது ரவிகரன் பாய்ச்சல்!
“முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளை எப்படியாவது அபகரித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே கோட்டாபய கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் செயற்படுகின்றனர்.”
-இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோட்டாபாய கடற்படை முகாமுக்காகத் தமது காணிகளை வழங்க சில காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார்.
மாவட்ட செயலரின் இந்தக் கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் அக்கரை என அழைக்கப்படும் பகுதியிலே 617 ஏக்கர் காணிகளை இலங்கை அரசானது கடற்படைத் தளத்துக்காக அபகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு வரையில் இந்தக் காணிகளை எமது தமிழ் மக்கள் பயன்படுத்தி வந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து எமது மக்கள் தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, பின்னர் மீளக்குடியமர்த்தப்பட்டபோது மக்களுக்குரிய அந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டு, அங்கு கோட்டாபய கடற்படை முகாம் என்ற பெயரிலே பாரிய கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதிலே தனியார் காணிகளாக 379 ஏக்கர் 2 ரூட் 4 பேச் காணிகளையும், மக்களுக்கு ஏற்கனவே அரச திணைக்களத்தால் வழங்கப்பட்ட காணிகளாக 291ஏக்கர் 1 ரூட் 6 பேச் காணிகளும், மொத்தமாக 670 ஏக்கர் 3 ரூட் 10 பேச் காணியில் 617 ஏக்கர் காணிகளை இந்தக் கடற்படைத்தளத்துக்காக அபகரித்து பாரிய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிகள் எமது மக்களினுடைய பூர்வீக வாழ்வாதார மற்றும் குடியிருப்புக் காணிகளாகும்.
இந்தக் காணிகளின் மூலம் எமது மக்கள் நிறைவான வருமானத்தையீட்டி தமது வாழ்க்கையை நடத்தி வந்திருந்தனர்.
இந்தக் காணிகளில் எமது மக்கள் பல்வேறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்துடன், இந்தக் காணிகளுக்கு அருகாமையில் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லக் கூடிய வகையில் பல கரவலைப்பாடுகளும் காணப்படுகின்றன.
அதேவேளை, எமது மக்கள் நந்திக்கடல், வடக்காற்றில் மீன்பிடித்தொழிலின் ஊடாக நிறைவான வருமானத்தைப் பெற்று வந்தனர்.
ஆனால், தற்போது அங்கு மீன்பிடியில் ஈடுபட்டால், தாம் கடற்படையால் அச்சுறுத்தப்பட்டு விரட்டப்படுகின்றனர் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறாக எமது மக்களின் வருவாய்கள் அனைத்தையும் முடக்குகின்ற வகையிலே ஒரு கடற்படைத்தளம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணிகளுக்குரிய எமது மக்கள் பல தடவைகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக ஒருமுறை அந்த மக்களின் அறிவித்தலுக்கு ஏற்ப, கடந்த 2018.02.22 அன்று நாமும் சென்று போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அதற்காகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுமிருந்தோம். தற்போதும் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு நாம் எமது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி, ஜனநாயக வழிப் போராட்டங்களில் ஈடுபடும்போது, எம்மை அடக்கி ஒடுக்கும் விதமாகவே இவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன.
இவ்வாறிருக்க அண்மையில் இந்தக் காணிகளை கடற்படைக்குத் தருமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.
அதற்கமைய அக்காணிகளை கடற்படைக்கு வழங்கினால், தமக்குக் காணிகளுக்குப் பெறுமதியான பணமாவது கிடைக்கும் என்ற எண்ணத்துடன், அந்தக் காணிகளோடு முழு ஈடுபாட்டுடன் செயற்படாத சிலர், தமது காணிகளைக் கடற்படைக்கு வழங்கும் நோக்கில் மாவட்ட செயலகம் நோக்கிச் சென்றதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
ஆனால், இந்தக் காணிகளால் தொடர்சியாகப் பல்வேறு வழிகளிலும் பயன்பெற்ற பெரும்பாலான மக்களுக்கு தமது காணிகளை எவருக்கும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை.
தமது பூர்வீகக் காணிகளே தமக்கு வேண்டும் என்ற நோக்குடன் தமது காணிகளின் விடுவிப்பை அவர்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மேலும், கடற்படைக்கோ, இந்த விடயத்தோடு தொடர்புடைய ஏனைய அரச திணைக்களங்களுக்கோ இந்தக் காணிகளை மக்களுக்கு விடுவித்து வழங்கும் நோக்கம் இல்லை.
மாறாக மக்களின் இந்தக் காணிகளை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
எமது மக்களுடைய பூர்வீகக் காணிகள் அவர்களிடமே கையளிக்கப்படவேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login