செய்திகள்
உப்பூர் அனல் மின் நிலைய திட்டம் மீள ஆரம்பம்?
உப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அனல்மின்நிலைய திட்டத்தை மீள ஆரம்பிக்க நடவடிக்கை மே்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழக மின்வாரியம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூரில் 12 ஆயிரத்து 788 கோடி ரூபாயில் தலா 800 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலைய கட்டுமானப்பணிகள் 2016இல் துவங்கின.
இந்த மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எடுத்து வர வேண்டும். இதற்காக ராமநாதபுரம்-தூத்துக்குடி ரயில் பாதையில் இருந்து உப்பூருக்கு தனி ரயில் பாதை அமைக்க வேண்டிய தேவை இருந்தது.
உப்பூர் மின் நிலையத்தில் 3100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிந்த நிலையில், அத்திட்டத்தை தொடர தேசிய பசுமை தீர்ப்பாயம் 2021 மார்ச்சில் தடைவிதித்தது.
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை, தனி ரயில் சேவையால் ஏற்படும் தொடர் செலவு உள்ளிட்ட காரணங்களால், உப்பூர் மின் நிலைய கட்டுமானப் பணியை நிறுத்த முடிவானது.
அதற்கு மாற்றாக அதே நிதியில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டுவரும் மின் நிலையத்திற்கு அருகில், தலா 800 மெகாவாட் திறனில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அதற்கு தேவையான நிலக்கரி, உடன்குடியில் அமைக்கப்பட்டுவரும் நிலக்கரி முனையத்தில் இருந்து, கன்வேயர் பெல்ட் வழியாக எடுத்துக்கொள்ளலாம்.
இதனால் தனி ரயில் பாதை அமைத்து நிலக்கரி எடுத்து வருவதை விட செலவு குறைவு என மதிப்பிடப்பட்டது.
உப்பூர் மின் நிலையத்தை இத்திட்டத்தை உடன்குடி க்கு மாற்ற மின் வாரிய இயக்குனர்கள் குழுவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. உப்பூர் மின் திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் எடுத்த உத்தரவுக்கு, ஜூலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
உப்பூர் மின் நிலைய பணிகளை அங்கேயே தொடரலாமா, உடன்குடி மாற்றலாமா, என்பது குறித்து தமிழக அரசிடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டது. இதற்கு அரசு மறு ஆய்வு செய்ய அறிவுறுத்தியது.
இதை அடுத்து உப்பூர் மின் திட்டத்தை அங்கேயே தொடரலாமா, உடன்குடி மாற்றலாமா, எதில் செலவு குறைவு என நவம்பரில் மின்வாரியம் தனியார் நிறுவனத்திடம் ஆலோசனை கோரியது.
கள ஆய்வு செய்த அந்நிறுவனம் உப்பூரிலேயே மின் திட்டத்தை தொடரலாம் என ஆலோசனை வழங்கி உள்ளது.
இந்த விவரத்தை அரசிடம் முறைப்படி தெரிவித்து, அரசு வழங்கும் ஆலேசனையின்படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
#WorldNews
You must be logged in to post a comment Login