செய்திகள்
அரச கடன் தொடர்பில் மாதாந்த அறிக்கை! – ரணில் கோரிக்கை
அரச கடன் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பில் மாதாந்தம் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,
” அரசமைப்பின் 148 ஆவது சரத்தின் பிரகாரம் அரச நிதி அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே இருக்கின்றது. எனினும், நாம் தகவல்களை கோரியிருந்தாலும் அவை இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே, மாதாந்தம் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் முதல் வாரத்திலேயே அரச கடன் மற்றும் கடன் சேவைகள் தொடர்பில் அறிக்கையொன்றை முன்வைக்குமாறு அரச கணக்குகள் பற்றி குழுவிடம் கோரிக்கை விடுக்கின்றேன். அப்போது அது பற்றி விவாதிக்க முடியும். நிதி விவகாரத்தில் நிலையான தன்மையை அதன்மூலம் பேணமுடியும்.
அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பு தொடர்பில் இன்று உரிய தகவல் வழங்கப்படுவதில்லை. கடன் பத்திரங்களும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. எனவே, சரியான தகவல்கள் அவசியம்.
தற்போது கிடைக்கும் தகவல்களின்படி, ஒரு பில்லியன் டொலருக்கும் குறைவான அந்நிய செலாவணி கையிருப்பே இருப்பதாக கதை அடிபடுகின்றது. எனவே, மாதாந்தம் அறிக்கை முன்வைத்தால் உண்மை தன்மையை அறியக்கூடியதாக இருக்கும்.” – என்றார்
#SriLankaNews
You must be logged in to post a comment Login