செய்திகள்
இலங்கை அரசின் செயலுக்கு துணை போக வேண்டாம்! – இந்திய துணை தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதியிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
இலங்கைத் தமிழர்களையும் தமிழ் நாட்டுத் தமிழர்களையும் பிரிக்க முயலும் இலங்கை அரசின் செயலுக்கு துணை போக வேண்டாம் என இந்தியாவின் துணை தூதரகத்தின் வதிவிடப் பிரதிநிதி ராம் மகேஷிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் குறித்த போராட்டத்திற்கு நேற்றைய தினம் இரவு(2) வருகைதந்து ஆதரவளித்திருந்தார்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செல்வதற்கு முன்பு இந்திய துணைத் தூதரகத்திற்குச் சென்று வதிவிடப் பிரதிநிதியிடம் மீனவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் மீனவர்களுக்கு அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவர்கள் தெரிவித்த விடயங்களையும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய துணைத் தூதரகத்தின் வதிவிடப்பிரதிநிதியுடன் நீங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பிலும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இரு மீனவர்கள் தொடர்பிலும் ஏற்கனவே மாதகலில் ஒருவர் மரணமடைந்த விடயம் தொடர்பிலும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இது ஒரு பயங்கரமான செய்தி. குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்தியாவை நோக்கி ஒரு அரசியல் தீர்வை முன்வைக்குமாறு கோரி நிற்கும் இந்தக் காலத்தில் ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் மோதவிட்டு பிரிக்கும் செயலை இலங்கை அரசும் இலங்கை கடற்படையும் கச்சிதமாகவும் மிகவும் துல்லியமாகவும் செயற்படுவதாக நான் அவர்களிடம் தெரிவித்து இருக்கின்றேன் .
அவர் இவ் விடயத்தினை இந்தியத்தூதரகம் மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதாகவும் தான் அறிந்தவரை கடல் எல்லையைத் தாண்டாதவாறு மீன்பிடியில் ஈடுபடுமாறு இந்திய மீனவர்களை அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் மீனவர்கள் அதை பின்பற்றுவார்களோ என்று தெரியாது என்றும் தெரிவித்தார் . ஆனால் சிறந்த பொறிமுறை ஒன்றை அமைத்தே அவற்றைத் தடுக்க வேன்டும் என்றும் தெரிவித்தார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தெரிவித்திருந்தார். இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான தூய வழியிலான ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட அவருடன் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவத் தளபதிகளினாலேயே ஒழுக்கமான தலைவர் என்று கூறிய எமது மாபெரும் தலைவனையே கொச்சைப்படுத்தியவரே அவர் – என்றார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login