செய்திகள்
காணிப் பிரச்சினைக்கு தீர்வு! – யாழ் முஸ்லிம்களுக்கு அலி சப்ரி உறுதி
நீதி அமைச்சினால் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்களுக்கான நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று மாலை யாழ் ஜிம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
குறித்த விஜயத்தின் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்,
தாங்கள் 1990 ம் ஆண்டு வலுக்கட்டாயமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் மீள் குடியேறி இங்கே வந்திருக்கின்றோம். ஆனால் எம்மில் பலர் தற்போதும் புத்தளம் பகுதியில் வசித்து வருகின்றார்கள்.
வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு காணி பிரச்சினை காணப்படுகின்றது. அதிலும்1990 ம் ஆண்டு நாங்கள் இங்கே வெளியேற்றப்படும் போது இருந்த குடும்பங்கள் பல மடங்காகியுள்ளதால் பலர் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற விரும்புகிற போதிலும் தற்போது காணிப் பிரச்சினை காணப்படுகின்றது.
2014ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முஸ்லிம்களுக்கு தொடர் மாடிக் கட்டிடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை.
தற்போது நீங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறீர்கள்.
எனவே எமது பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து நமக்குரிய தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் என தெரிவித்ததோடு, எம்சார்பில் பேசுவதற்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. நாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளவும் முடியாது.
எனவே நம் சார்பில் எமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து எமக்கு உள்ள காணிப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வினை பெற்று தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி,
இந்த காணிப் பிரச்சினை என்பது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல. வடக்கில் அனைத்து மக்களுக்கும் இந்த பிரச்சினை காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login