செய்திகள்
சட்டவிரோத மணல் அகழ்வு! – ஆபத்தின் விளிம்பில் இரணைமடு குளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், மாவட்டத்தின் மிகப்பெரும் வளமான இரணைமடு குளம் ஆபத்தின் விளிம்பில் உள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல், மாவட்டச் செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில், நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
“சில வருடங்களே இங்கு அதிகாரிகளாகிய நாங்கள் கடமையில் இருப்போம். ஆனால், இங்குள்ள மக்களும் சமூகமும் இப் பிரதேசத்திலேயே தொடர்ந்தும் இருக்கப் போகின்றனர்.
மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.
இரணைமடு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எதிர்காலத்தில் பெரியதொரு வளத்தை நாங்கள் இழந்து போக முடியாது. இதனால் ஏற்படும் ஆபத்துக்களும் அழிவுகளும் அதிகமாக இருக்கும்.
எமது நிலத்தின் வளங்களை பாதுகாக்க சமூகத்தினுடைய ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிக மிக அவசியமானது.
இந்த அடிப்படையில், முதற்கட்டமாக 5 இடங்களில் இராணுவ காவலரண்களை அமைத்து இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
“அதற்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து இடங்களை அடையாளப்படுத்தி, காவலரண்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வழங்க வேண்டும்” – என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login