செய்திகள்
இருளில் மூழ்கிறது இலங்கை! – (காணொளி)
இலங்கையின் பொருளாதாரமானது என்றுமில்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பும் ஆட்டம் கண்டுள்ளது. டொலர் நெருக்கடியால் நாளாபுறங்களில் இருந்தும் பிரச்சினைகளும், சர்ச்சைகளுமே படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை திரட்டுவதில்கூட பெரும் திண்டாட்டம். மறுபுறத்தில் எரிபொருள் இறக்குமதியிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளது இந்த டொலர் தட்டுப்பாடு.
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்கள் இன்மையால் மின்சக்தி அமைச்சு வழிதெரியாது விழிபிதுங்கி நிற்கின்றது. டொலர்கள் இன்றி, இதற்கு மேலும் எரிபொருளை விநியோகிக்க முடியாதென வலுசக்தி அமைச்சு கைவிரித்துள்ளது.
இதனால் நாட்டில் நாளொன்றுக்கு 4 மணிநேரம் மின்தடை அமுல்படுத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொலர் பிரச்சினையால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில்கூட 10 நாட்களுக்கு தேவையான எரிபொருட்களே கைவசம் உள்ளன. களனிதிஸ்ஸ நிலையத்தில் 4 நாட்களுக்கு தேவையான எரிபொருளே உள்ளன. இதற்கிடையில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலும் இயந்திரமொன்று சேதமடைந்துள்ளது.
எனவே, மின்வெட்டு அமுலாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
நாளை திங்கட்கிழமை ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் இரு மணிநேரம் மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று அறிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் 9.30 வரை 4 கட்டங்களாக இந்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது எனவும், இது தொடர்பில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி நாளை கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும், 25 ஆம் திகதிவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிவராதென மின்சக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் மின்சார நெருக்கடி சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது. தெரு மின் விளக்குகளை ஒளிரவிடாமல் இருத்தல், அரச நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் சகிதம் மின்சாரத்தை பயன்படுத்தல் உள்ளிட்ட மேலும் பல யோசனைகளை மின்சக்தி அமைச்சு முன்வைக்கவுள்ளது.
ஏற்கனவே வரிசை யுகத்தால் அரசுமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மின்வெட்டு அமுலானால் அது அரசுக்கு மேலும் நெருக்கடியாக அமையும் என்பதால், தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம்வரை போதுமானளவு மழை வீழ்ச்சி கிடைக்காது என்பதால், நீர் மின் உற்பத்தியும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளக்கூடும்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login