செய்திகள்
இந்திய மீனவர்கள் அத்துமீறல்! – காரைநகரில் இன்று போராட்டம்
காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் ஆகியவை இணைந்து இன்று கால போராட்டம் ஒன்றறை முன்னெடுத்திருந்தன.
தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இன்று காலை காரைநகர் பிரதேச சபையின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த மீனவர்கள், அங்கிருந்து பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்றனர்.
பிரதேச செயலகத்தை சென்றடைந்த குறித்த பேரணியைச் சேர்ந்தவர்கள், ஜனாதிபதி , மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கான மகஜரை பிரதேச செயலக அதிகாரிகளிடம் கையளித்திருந்தனர்.
கட்டுக்கடங்காமல் செல்லும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால், எமது கடல் வளம் , கடல் சூழல்,எமது உபகரணங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் என்பவை அழிக்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். பல தரப்புக்களிடம் மகஜர்களையும் கையளித்துள்ளோம். இருப்பினும் இன்று வரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை .
வெளிநாட்டு மீனவர்கள் ஒழுங்கப்படுத்தல் தடைச்சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும், உள்ளூர் இழுவைமடி தொழில் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேண்டும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் அழிக்கப்பட்ட எமது தொழில் உபகரணங்களின் மதிப்புகள் பல கோடி ரூபா. அதற்கான நஷ்டடஈடுகளை பெற்றுத்தர ஆவன செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை மலர்ந்துள்ள இந்த புதிய வருடத்திற்குள் எமக்கு தீர்வினை பெற்று தர சகல தரப்பினர்களும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் , கடல் வளத்தையும் காத்து எதிர்கால சந்ததியினரின் கைகளில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரியுள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login