செய்திகள்
ஜனாதிபதிக்கு முழு ஆதரவு! – பல்டி அடிக்கும் சு.க
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிழ்ச்சியடைவதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமென கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
யதார்த்தமாக தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி விடயங்களை முன்வைப்பாரென நாம் எதிர்பார்த்தோம். எனினும் குறிப்பிடவேண்டிய சகலதையும் ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்டார்.
பாரிய நெருக்கடிகளுக்கு நாம் தீர்வு காண வேண்டியுள்ளது என்ற விடயத்தையும் அவர் குறிப்பிட்டார்.
நாடு எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினை, எரிபொருள், கல்வித் துறை உள்ளிட்ட விடயங்களையும் அவர் தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும் பாரிய சவால்களை அவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். எதிர்வரும் மூன்று வருடங்கள் நாட்டுக்கு பெரும் சவால்கள் உள்ளன. அதேபோன்று நாடு என்ற ரீதியில் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது என நாம் அனைத்து நாட்டு மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம். சவால்களை எதிர்கொள்ளக் கூடிய பலம் எமக்குத் தேவை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதில் எந்தவித பிரச்சினையும் கிடையாது. அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
சிறுசிறு சிக்கல்கள் ஏற்படும்போது நாம் அது தொடர்பில் பேச்சு நடத்துவோம். அது அரசாங்கத்தின் ஆரோக்கியமான நிலைக்கு சிறந்ததாக அமையும்.
எதையும் பேசாமல் அனைத்துக்கும் கைகளை உயர்த்துவதை விடுத்து சில சில விடயங்களில் எமது கருத்துக்களை தெரிவிப்பது அவசியமாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login