செய்திகள்
வெளிநாட்டவர் வசிக்கும் பகுதிகளை “சுத்திகரிக்கும்” நேரம் வந்துவிட்டது! – வலெரியின் கூற்றால் பெரும் சர்ச்சை
நாட்டில் காட்டுமிராண்டித்தனமாக சட்ட மீறல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளை – வெளிநாட்டவர்கள் மாத்திரம் வசிக்கின்ற வட்டகைகளை-“KÄRCHER” கொண்டு சுத்திகரிக்க விரும்புகிறேன் என்று வலதுசாரி வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் கூறியிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பாகப் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இந்தக் கூற்றை வெளியிட்டிருக்கிறார். “வீட்டின் நில அறையில் இருந்து KÄRCHER கருவியை மீண்டும் வெளியே எடுப்பதற்கு விரும்புகிறேன்” (Je vais ressortir le Kärcher de la cave) என்று அவர் கூறியிருக்கிறார்.
தண்ணீரை அழுத்திப் பாய்ச்சி அழுக்குகளைத் துப்புரவு செய்கின்ற கழுவும் கருவிகளில் Kärcher என்பது பிரபலமானது. பிரான்ஸில் இந்த வர்த்தகப் பெயரிலான கழுவும் கருவிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் வெளிநாட்டவர்கள் தொடர்பான அரசியல் விவாதங்களிலும் அந்தப் பெயர் பிரபலமானது.
KÄRCHER கருவியின் பெயரைப் பயன்படுத்தி பெக்ரெஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த மூத்த அரசியல் தலைவர் நிக்கலஸ் சார்க்கோசியே வெளிநாட்டவர்களது வன்முறைகளை ஒடுக்குவதற்காக அவர்கள் வசிக்கும் இடத்தை KÄRCHER மூலம் தூய்மையாக்க வேண்டும் என்ற கூற்றை முதலில் வெளியிட்டிருந்தார்.
தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகமாக வசிக்கின்ற பாரிஸின் புற நகரமான la Courneuve (Seine-Saint-Denis) பகுதியில் சிறுவன் ஒருவன் கொலைசெய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்றிருந்த சமயமே நிக்கலஸ் சார்க்கோசிஅந்த நகரத்தை Kärche மூலம் தூய்மைப்படுத்தவேண்டும் (nettoyer au Kärcher) என்று கூறியிருந்தார்.
அச் சமயத்தில் அவரது அந்தக் கருத்து அரசியலில் பெரும் சலசலப்பை உண்டுபண்ணி விவாதங்களைக் கிளப்பியிருந்தது. அவரது கட்சி சார்பில் மக்ரோனை எதிர்க்கின்ற பொது வேட்பாளரான பெக்ரெஸ் அம்மையார் அதே கருத்தையே இன்று மீண்டும் வெளியிட்டிருக்கிறார்.
“இது வீதிகளில் சட்டத்தை நிலைநிறுத்துவதுடன் சம்பந்தப்பட்டது. அதற்காகவே Kärcher கருவியை வெளியே எடுக்க விரும்புகிறேன். ஏனென்றால் காட்டுமிராண்டிகள் புரிகின்ற வன்செயல்களைப் பற்றி முகத்துக்கு நேராகக் கதைக்க எவரும் தயாராகவில்லை “என்று வலெரி பெக்ரெஸ் தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸின் அரசியலில் வெளிநாட்டுக் குடியேறிகளைக் கீழ்த்தரமாக மதிப்பிடுகின்ற வார்த்தைப் பிரயோகம் எனக் குறிப்பிடப்படுகின்ற சுத்திகரிப்புப் பெயரை (Kärcher) அவர் மறுபடியும் அரசியல் அரங்குக்குக் கொண்டுவந்திருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
வலெரி பெக்ரெஸ் நாட்டின் பிரதான வலதுசாரிக் கட்சியைச் சார்ந்து பொது வேட்பாளராக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அதிபர் மக்ரோனைத் தோற்கடிக்கக் கூடிய ஒரே வேட்பாளர் அவரே என்பதை சமீபத்திய கணிப்புகள் வெளிப்படுத்தி உள்ளன.
பிரான்ஸின் அதிபர் தேர்தலுக்கு இன்னமும் நான்கு மாதங்களுக்கும் குறைவானகாலமே இருக்கின்ற நிலையில் வைரஸ் பெருந்தொற்றைத் தவிர்த்து அரசியலில் தீவிரமான வேறு சில விவகாரங்கள் மீது வாக்காளர்களது கவனத்தைத் திருப்புவதற்கு பிரதான வேட்பாளர்கள் முயன்று வருகின்றனர் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
#World
You must be logged in to post a comment Login