செய்திகள்
மாவீரன் “கர்ணன்” : முல்லை பொலிசாருக்கு இனத்துவேசத்தை தூண்டுகிறதாம்!!
மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் ,
எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்திருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் வீதியில் இடைமறித்து அதற்கு பின்பக்கத்தில் இருந்த ‘மாவீரன் கர்ணன்’ என்ற ஸ்டிக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
பின்பு அந்த ஸ்டிக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி அனுமதி பத்திரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கூறி சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கி எடுத்துவிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறும் கூறி விட்டு சென்றுள்ளனர்.
மகாபாரதத்தில் வரும் பாத்திரமான கர்ணன் எமது சமயத்தின் வரலாற்று கதையை கூறும் வகையிலேயே அந்த பாத்திரத்தின்மீது நான்கொண்டுள்ள பற்றின் காரணமாக நான் அந்த பெயரை வடிவமைத்து எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியிருந்தேன்.
ஆனால் அந்த மாவீரன் என்ற வாசகத்துக்காகவே என்னை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு என்னை அழைத்திருந்தனர்.
இதனையடுத்து எனது தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்திய பொலிஸார் ,உங்களது முச்சக்கரவண்டியை ஓட்டிவந்தவரது சாரதி அனுமதி பத்திரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உள்ளது.
எனவே விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வாகன உரிமையாளரான நீங்கள் வரவேண்டும் என பொலிஸார் அழைத்தனர்.
நான் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் ”மாவீரன் கர்ணன்” என எழுதிய வாசகம் இன துவேசத்தை ஏற்படுத்தும் விடயம் என இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் கண்காணித்தே உங்களது முச்சக்கரவண்டியை பிடித்துள்ளோம் என கூறி வாக்குமூலம் பெற முயற்சித்தனர்.
இதேவேளையில் எனது தம்பியையும் பொலிஸ் நிலையத்துக்கு வர கூறுமாறு அழைத்து அவரிடமும் இவ்வாறு நடந்து கொண்டிருந்தனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் உடனடியாக எமது குடும்பத்தினரால் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து திடீரென வாக்குமூலம் பெறுவதை நிறுத்தினர்.
இதனையடுத்து பொலிஸார் எனது தம்பியை போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டமை ஆகிய குற்றசாட்டுகளை சுமத்தி நேற்று நண்பகல் கைது செய்து பொலிஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.
ஆனால் எனது சகோதரன் பொலிஸார் சாரதி அனுமதி பத்திரத்தை கேட்கும்போது கொடுத்துவிட்டு ஏற்றிவந்தவர்களை உரிய இடத்தில இறக்கிவிட்டு மீண்டும் பொலிஸார் கூறியபடி பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார் .
அவரை கைது செய்தமைக்கான காரணத்துக்கான பற்றுசீட்டை கேட்டபோது கைதுக்கான பற்றுசீட்டை வழங்கமுடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.
நான் தொடர்சியாக கைதுக்கான பற்றுசீட்டு எமக்கு வழங்கவேண்டும் என கேட்டு பொலிஸாரோடு வாதிட்ட பின்னரே சிங்கள மொழியில் எழுதிய பற்றுசீட்டை வழங்கினர்.
நான் எனது சொந்த மொழியில் வழங்குமாறு கோரியபோதும் அவர்கள் அவ்வாறு தரமுடியாது என கூறியிருந்தனர்.
இந்த நிலையில் எனது சகோதரனை இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்துவதாக கூறியிருந்தனர்.
பின்னர் இன்றையதினம் காலை 11 மணிக்கு சிங்களமொழியில் எழுதிய தற்காலிக பொலிஸ் துண்டை வழங்கி பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.
அத்துடன் எனது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் ஒட்டபட்டிருந்த மாவீரன் கர்ணன் என்ற வாசகத்தையும் அகற்றுமாறு கூறினர். அவ்வாறு அகற்ற முடியாது என நான் கூறினேன்.
அவ்வாறு நான் அகற்றவேண்டுமாக இருந்தால் என்ன காரணத்துக்காக என குறிப்பிட்டு நீதிமன்றில் முற்படுத்துங்கள் என கூறி அகற்ற மறுத்த நிலையில் எனது முச்சக்கரவண்டியையும் விடுவித்தனர்.
மாவீரன் என்ற வாசகம் எனது மொழியில் உள்ள ஒரு சொல் அந்த சொல்லை எழுவதற்கு கூட எமக்கு சுதந்திரம் இல்லையா என்ற கேள்வியை பொலிஸாரின் இந்த செயற்பாடு கேட்க வைக்கின்றது.
கடந்த ஒருவருடங்களுக்கும் மேலாக நான் இந்த வாசகத்தை எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியுள்ளேன்.
ஆனால் இந்த மாதத்தில் இவ்வாறு நடந்துகொண்டமை எனக்கும் எனது சகோதரனுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login