செய்திகள்
இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் அரசின் நோக்கம் என்ன? – சுரேஷ் பிரேமச்சந்திரன்
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என ஈபிஆர்எல்எப் இன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி செயலணி
ஒரு நாடு ஒரு சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாச்சாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது.
உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றன. அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது. சில மாநிலங்களில் இல்லை.
இலங்கையிலும் கூட யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரியாத் சட்டமென ஒவ்வொரு சட்டங்கள் காணப்படுகின்றன. இது இன்று நேற்றல்ல. நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்களே அவை. அது இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதியினால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையில் இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இனவாதி ஞானசாரர்
பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்ட பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக்கொள்ளக் கூடியவர்.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தவர். நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறைத் தண்டனை வழங்கி இருந்தது. அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.
இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்ற பொழுது கேலியாகவும்
சிரிப்புக்கிடமாகவுமே காணப்படுகின்றது. இந்த அரசு எதனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது.
மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டில் இருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதுதான் இவர்களது நோக்கமா என்கின்ற கேள்வி எழுகின்றது.
மாகாண சபை முறையை ஒழிக்க திட்டமா?
ஒரே நாடு ஒரே சட்டம் மாகாணசபைகளை இல்லாமல் செய்கின்ற, மாகாணசபைகளுக்கு சட்டமியற்றும் உரிமையை இல்லாமல் செய்கின்ற அடிப்படையில் இவ்வாறான ஒரு புதிய முயற்சியை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி பதவிக்கு வந்தபொழுது சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பதே எனது கடமை என்றார். சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் என்பது வேறு தமிழ் முஸ்லிம் இனங்களை, அவர்களது கலாசாரங்களை, சட்டதிட்டங்களை, நடைமுறைகளை இல்லாமல் செய்வதென்பது வேறு.
அரசாங்கம் இப்பொழுது எடுக்கக்கூடிய முயற்சி என்பது தேசிய இனங்களான வடகிழக்கு தமிழர்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம், மலையகத் தமிழர்களாக இருக்கலாம். அவர்களுக்கான பண்பாடு கலாசாரம் என்பதை இல்லாமல் செய்து இது சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையில் இந்த சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனவா என்ற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுந்திருக்கின்றது.
செயலணியில் தமிழர்கள் இல்லை
இவ்வாறான செயலணியில் தமிழர்கள் இல்லை என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுபவர்களின் நோக்கம் என்ன?
இதிலே முஸ்லீம்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும்கூட முஸ்லிம்களுக்கு இதனால் உபகாரங்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தங்களுக்கு தலையாட்ட கூடிய சிலரை நியமித்து எதனையும் சாதிக்கப் போவது கிடையாது.
இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இது வெறுமனே தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல சிங்களத் தரப்பில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சி கூட செயற்படவேண்டும்.
ஏனைய இனங்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மறுதலித்து ஒரு ஜனநாயக விரோத செயற்பாடாக தான் இந்த செயலணி உருவாக்கம் இருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login