செய்திகள்
நாய் வாலை சுருட்டிக்கொள்வது போல் சுருட்டிக்கொண்டு அரசிற்குள்: குமார வெல்கம
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து 11 பங்காளிக் கட்சிகளும் உறுதியான தீர்மானத்தை எடுத்து வெளியேறக் கூடிய முதுகெலும்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ள 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க ஜனாதிபதி மறுத்துள்ளமை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே குமார வெல்கம மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு இந்த அணியினரை அரசிலிருந்து நேரடியாக விரட்டாமல் மறைமுகமாக விரட்டி வருகின்றது. எனினும், அந்த அணியினருக்கு வெட்கமில்லை. இந்த அணியினருக்கு உறுதியான தீர்மானத்தை எடுத்து அரசிலிருந்து வெளியேறக் கூடிய முதுகெலும்பு இல்லை.
அதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வெட்கமில்லை. அவர்கள் வெட்கமின்றி தொடர்ந்தும் அரசுக்குள் இருந்து வருகின்றனர்.
அரச தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்த போதிலும் அவர்கள் வெட்கமின்றி, நாய் வாலை சுருட்டிக்கொள்வது போல் சுருட்டிக்கொண்டு அரசுக்குள் இருக்கின்றனர்.
விமல் வீரவன்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் அரசில் இல்லாவிட்டாலும் அரசை முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவார்.
இதன் காரணமாகவே கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை சம்பந்தமாகப் பேச்சு நடத்த விமல் குழுவினருக்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை” – என்றார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login