செய்திகள்
பாடசாலைகளை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்! – கல்வியமைச்சு தெரிவிப்பு!


நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இச் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலை அபிவிருத்திக் குழு, பொலிசார், சுகாதார பரிசோதகர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலைகளை துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
அதனையடுத்து சுகாதாரத்துறையினரின் பரிந்துரை கிடைத்ததும் உடனடியாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதுமுள்ள 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 5,231 உள்ளன.
அந்த பாடசாலைகளே முதலில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறுவர் நோய் சம்பந்தமான மருத்துவர்கள் 100 பேர் மாணவர்களை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு மாணவருக்கும் காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட நோய் காணப்படுமானால் அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாமென பெற்றோர் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.