செய்திகள்
மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது! – மனுஷ நாணயக்கார
கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை நாசப்படுத்த முயலும் வைரஸை நாடு கடத்திவிடுவதாகும். இந்த நாட்டிலிருந்து மொட்டு வைரஸ் மற்றும் ராஜபக்ச வைரஸை ஒழிக்க நாம் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ வைரஸால் நாடு முழுவதும் மோசமாகிவிட்டுள்ளது. நாட்டை முடக்கி விட்டு பெரிய வணிகர்களும் தங்கள் கூட்டாளிகளுக்கும் அத்தியாவசிய பொருள்களை கொண்டுவர அனுமதித்துவிட்டு ஒரு பொருளாதார வைரஸை செயல்படுத்தியவண்ணமுள்ளனர்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் நியமிக்கப்பட்டார். நிதிச் சட்டத்தின்படி, ஒரு அரசியல்வாதியையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரையோ இதற்காக நியமிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் ஆகியோர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டோம் என்றே சொன்னார்கள். விற்றதை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள். ஆனால் இவர்கள் வந்த நாளிலிருந்து நிலத்தை விற்று வருகின்றனர். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களின் உரிமைகளையும் மூன்று நாடுகளுக்கு கையளிக்கும் நிலை ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சியாக நாங்கள் குரல் எழுப்புகிறோம்.இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் இரகசியமாகவே செயற்படுத்தப்படுகிறது. இந்த விடயங்களைப் பற்றி நாம் பேசினால், எம்மை ஒதுக்கி இழுக்கவே முயற்சிக்கிறார்கள்.
கொரோனா வைரஸை முன்னணியில் வைத்து தான் அரசாங்கம் தனது இருப்பை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மின் உற்பத்தி நிலையங்கள் விற்பனைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் மக்கள் தங்கள் வயிற்றை இறுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு என்னை வரச் சொன்னார்கள். ஆனால் அழைத்த காரணம் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொருவரும் அழைக்கப்பட காரணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் ஆணவத்தால் தான் இந்த விடயத்தை குறிப்பிடாமல் சமூகமளிக்குமாறு சொல்கிறார்கள். நாம் பேசும்போது வாயை மூட வைக்கவே இவ்வாறு அழைத்துள்ளனர்.
You must be logged in to post a comment Login