தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முக்கிய இடங்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீடு மற்றும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கும் இன்று (நவம்பர் 12) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு அநாமதேய மின்னஞ்சல் மூலமாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அந்த மின்னஞ்சலில் பாடகி சின்மயி ஸ்ரீபாதாவின் வீடு மற்றும் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தொடர் மிரட்டல்களை அடுத்து, உடனடியாகச் சென்னை மற்றும் திருச்சியில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குக் காவல்துறையினர் விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சின்மயி வீடு மற்றும் திருச்சி கல்லூரியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில், அவ்விடங்களில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. விடுக்கப்பட்ட மிரட்டல் புரளி (Hoax) என உறுதியானது.
கடந்த சில வாரங்களாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மிரட்டல்கள் அனைத்தும் பெரும்பாலும் ‘புரளி’ என நிரூபிக்கப்பட்டாலும், இதுதொடர்பாக காவல்துறை தொடர்ந்தும் விசாரித்து வருகிறது.

