சினிமா

சிவாஜியின் இறுதி ஊர்வலத்தை ஒற்றை சிங்கமாய் வழிநடத்திய விஜயகாந்த்: வைரல் வீடியோ

Published

on

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் சிங்கமாய் நின்று வழிநடத்திய பழைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை மியாட் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த கேப்டன் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்த நிலையில், இன்று காலை 6:10 மணியளவில் மருத்துவ சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அஞ்சலிக்காக இன்றும், நாளையும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

நாளை(டிசம்பர் 29ம் திகதி) மாலை 4.45 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் ஒற்றை சிங்கமாய் நின்று ஒட்டு மொத்த கூட்டத்தையும் கேப்டன் விஜயகாந்த் வழிநடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2001ம் ஆண்டு ஜூலை 21ம் திகதி நடைபெற்ற சிவாஜி அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் சிவாஜியின் வீட்டிற்கு முன்பு குவிந்தது.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன், சிவாஜியின் அவர்களின் உடலை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது, உடனடியாக வேட்டி சட்டையுடன் இருக்கும் விஜயகாந்த் கையில் இருந்த துண்டுடன் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

Exit mobile version