சினிமா
வணங்கான் திரைவிமர்சனம்
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வணங்கான். இப்படத்தை V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வணங்கான் திரைப்படம் எப்படி இருக்கிறது விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அருண் விஜய் (கோட்டி) வாய் பேச இயலாதவராக இருக்கிறார்.
தங்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய், தன் கண்முன் கொடுமைகள் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் நபராகவும் மாறிவிடுகிறார். தட்டி கேட்பது என்றால், அந்த கொடுமைகளை செய்யும் நபர்களை அடித்து துவைத்து சாவு பயத்தையே காட்டி விடுகிறார்.
ஊருக்குள் இப்படி தொடர்ந்து அருண் விஜய் செய்து வர, இவருக்கு நிலையான வேலை இருந்தால் மட்டுமே இப்படி எதுவும் செய்யமாட்டார் என முடிவு செய்து, அருண் விஜய்யின் நலன் விரும்பியான சர்ச் ஃபாதர், ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிடி வேலையை அருண் விஜய்க்கு வாங்கி தருகிறார்.
அங்கு வேலை பார்த்துக் கொண்டே அங்குள்ள அனைவரிடமும் பழகும் அருண் விஜய்க்கு பல சொந்தங்கள் கிடைக்கிறது. இந்த நிலையில், அதே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள இரண்டு நபர்களை அருண் விஜய் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்தது நான் தான் என, தானே முன் வந்து போலீசிடம் சரணடைகிறார்.
போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் அருண் விஜய். இவர் எதற்காக இந்த கொலையை செய்தார்? இதன்பின் என்ன காரணம் உள்ளது? எதை அனைவரிடம் இருந்தும் காரணத்தை மறைகிறார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் அருண் விஜய் நடிப்பு வேற லெவல். வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது.
இவருடன் இணைந்த நடித்த நடிகைகள் ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோடு ஒன்றிப்போகிறது. கௌரவ வேடத்தில் தோன்றிய மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு.
இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.
முதல் பாதியில் அருண் விஜய்க்கும் ரோஷ்ணி பிரகாஷுக்கும் இடையிலான காதல் காட்சிகள் கவனம் ஈர்க்கவில்லை. மற்றபடி படத்தில் குறை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.
குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் பாலா. கண்டிப்பாக அருண் விஜய் மற்றும் பாலா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளை ஒருவன் தட்டிக் கேட்டால், அவனுடன் இந்த சட்டமும் நிற்கும் என காட்டிய விதம் பாராட்டுக்குரியது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு பக்கா. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் பலம்.
பிளஸ் பாயிண்ட்
அருண் விஜய் நடிப்பு.
பாலாவின் இயக்கம்.
திரைக்கதை.
சாம் சி.எஸ் பின்னணி இசை.
மைனஸ் பாயிண்ட்
பெரிதாக எதுவும் இல்லை.
மொத்தத்தில் வணங்கான் அனைவரையும் கலங்க வைத்துவிட்டான். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்..