கட்டுரை

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த மற்றொரு விண்கலம்

Published

on

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்ந்த மற்றொரு விண்கலம்

சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து நேற்றையதினம் (02.08.2023) இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றிகரமாக சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்3, சந்திரயான் 1, சந்திரயான் 2 என மூன்று திட்டங்களின் இயக்குநர்களும் தமிழர்கள் என்ற வரிசையில் சூரியனை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ அனுப்ப உள்ள ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநராகவும் தமிழரே செயல்படுகிறார்.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.

பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்(எல்-1) எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும்.

சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாட்கள் பயணித்து மேற்குறித்த இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.

இதன் ஆய்வுக்கருவிகள் 5 ஆண்டுகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன.

ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவுக்கு தனி இடம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Exit mobile version