கட்டுரை

நிலவில் சதம் தொட்ட சந்திரயான் 3: பத்தாயிரம் கோடி இலாபம்

Published

on

நிலவில் சதம் தொட்ட சந்திரயான் 3: பத்தாயிரம் கோடி இலாபம்

சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாகவும் நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதேவேளை சந்திரயான் 3 வெற்றிக்குப் பிறகு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) என்ற அரசு நிறுவனமொன்று சுமார் ரூ.10,000 கோடி இலாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 பணியை வெற்றியடையச் செய்வதற்கு BHEL நிறுவனமும் பெரும் பங்காற்றியிருந்தது.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே வாரத்தில் 26 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதையடுத்து இந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, குறித்த நிறுவனத்தின் பங்குகள் வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்- 3 இன் வெற்றிகரமான பயணம் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ, எதிர்வரும் செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version