தொழில்நுட்பம்
கட்டணம் செலுத்தினால் எடிட் வசதி! – ட்விட்டர் அதிரடி
ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வசதியை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவில் முதற்கட்டமாக எடிட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.
எடிட் ட்விட் அம்சத்தின் சோதனை அமெரிக்காவில் நீட்டிப்பதாக ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசதி முதற்கட்டமாக ட்விட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் எடிட் செய்யும் வசதியை வழங்க அதன் பயனர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வசதி மூலம் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை அதன் பின் எடிட் செய்ய முடியும்.
இந்த வசதியை கொண்டு ட்விட்டர் பதிவுகளில் தவறுதலாக ஏற்படும் பிழைகளை திருத்த முடியும். எனினும், இந்த அம்சம் போலி தகவல்கள் பரவ உதவும் என கூறி ட்விட்டர் இத்தனை ஆண்டுகளாக எடிட் வசதியை வழங்காமல் இருந்து வந்தது.
எனினும், தற்போது இந்த நிலை மெல்ல மாற துவங்கி உள்ளது. மாதத்திற்கு 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 410 செலுத்தி ட்விட்டர் புளூ சேவையை பயன்படுத்துவோருக்கு எடிட் ட்விட் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் கொண்டு ட்விட் செய்த முப்பது நிமிடங்களில் சில முறை ட்விட்டர் பதிவுகளை மாற்ற முடியும். இவ்வாறு எடிட் செய்யப்படும் ட்விட்களில் ஐகான் மற்றும் டைம்ஸ்டாம்ப் வழங்கப்படும். இதை கொண்டு ட்விட் எடிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
#technology
You must be logged in to post a comment Login