தொழில்நுட்பம்
வெறும் 10 நிமிடத்தில் 100 % சார்ஜ்! – அறிமுகமானது புதிய ஸ்மார்ட் போன்


ஐகூ நிறுவனம் அதன் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி ஐகூ 10 மற்றும் ஐகூ 10 ப்ரோ ஆகிய மாடல்கள் ஐகூ 10 சீரிஸில் இடம்பெற்று உள்ளது. ஐகூ 10-ல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் AMOLED டிஸ்ப்ளேவும், ஐகூ 10 ப்ரோவில் 6.78 இன்ச் குவாட் ஹெச்.டி ப்ளஸ் கர்வுடு E5 LTPO AMOLED டிஸ்ப்ளேவும் இடம்பெற்று உள்ளது.
இந்த இரண்டு மாடல்களும் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை ஐகூ 9-ல் இருந்த அதே கேமரா செட் அப் ஐகூ 10 மாடலில் இடம்பெற்று உள்ளது. ஆனால் ஐகூ 10 ப்ரோ மாடலில் ஜி.என்.5 சென்சார் உடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் கேமராவும், 50 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு ஆங்கிள் கேமராவும், 14.6 மெகாபிக்சல் டெலிபோட்டோ கேமராவும் இடம்பெற்று உள்ளது.
10 ப்ரோ மாடலில் 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் உலகின் அதிவேக சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாக இது விளங்குகிறது. ஐகூ 10 ப்ரோ மாடலில் மட்டுமே 200 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஐகூ 10 மாடலில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம் ஐகூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனை 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் அதேபோல் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஐகூ 10 ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஐகூ 10 மாடலில் 8ஜிபி + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப் படி ரூ.43 ஆயிரத்து 825 எனவும், அதன் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 55 ஆயிரத்து 645 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ஐகூ 10 ப்ரோ மாடலின் 8ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.59 ஆயிரத்து 225 எனவும், 12ஜிபி + 512 ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 55 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.