Connect with us

சிறுகதை

‘காகமும் கரும்பலகையும்’ – அகமது ஃபைசல்

Published

on

WhatsApp Image 2021 09 04 at 5.10.55 AM

‘காகமும் கரும்பலகையும்’

விஞ்ஞான ஆய்வுகூடத்தின் வெளிப்பக்க ஜன்னல் ஓரமாக கிடந்த அந்த சுவர்க் கடிகாரத்தின் முட்கள் ஜன்னல் கம்பிகளைப் பார்த்து மூச்சடைத்துக் கிடந்தன. அப்போதுதான் மூச்சு அடங்கினாற்போல் கடிகாரத்தின் முகம் பிரகாசமாய் இருந்தது. மூச்சடைத்த நேரத்தை மட்டும் சரியாக காட்டிக்கொண்டன முட்கள்.

அந்த நேரம்தான் பாடசாலை கலைவதற்கு கடைசி மணி அடிக்கும். மணி அடித்தது. தானாகவில்லை. நான்தான் அடித்தேன். என் வகுப்புக்கு முன்னால் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த இரும்பு வளையத்திற்குப் பக்கத்தில்தான் என் இருக்கை. மணி அடிப்பது என் கடமை.

நான் சுத்தியல் தூக்குவதைக் கண்ட மாத்திரத்தில் கதிரையை விட்டு சில மாணவர்கள் எழுந்து விடுவார்கள். அவர்களுக்காக வேண்டி ஒரு நிமிடம் பிந்தியே மணி அடிப்பேன்.

அந்த இரும்பை தினமும் பார்ப்பதால் என்னவோ என் வகுப்பில் இருக்கும் சில பெண்களுக்கு மனமும் இரும்பாகிப் போச்சி. பேசாம பேசாம வாங்கி வச்சிருந்து தின்பாளுகள்.

பெல் அடித்ததுதான் தாமதம் சில மாணவர்கள் சிறையில் இருந்து தப்புவதுபோல் மதில் மேலால் ஏறிக் குதித்து வீட்டுக்கு ஓடிவிடுவார்கள். மற்றவர்கள் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நின்று சலவாத்துச் செல்லி எறும்புகள் போல ஊர்ந்து அணிவகுத்துச் செல்வார்கள். கையில் பிரம்போடு கேற்றடியில் பி.ரி பாட ஆசிரியர் நிற்பார்.

இப்போது யாரும் இல்லாமல் ஒரு விதவையைப் போன்று சோகம் ததும்பியிருந்தது. பாடசாலை. அந்த ஓடாத கடிகாரத்தின் “டிக் டிக்” சத்தம் என் காதுகளுக்குக் கேட்டது. அதிபரும் கடைசியாகத்தான் போனார். சத்தமேயில்லாமல் சென்ற அவரது மோட்டார் சைக்கிள் பள்ளியின் மெயின் கேற்றைக் கடந்ததும் பெருமூச்சு விட்டுக் கத்தியது. அவரை வீடு கொண்டு சேர்க்கும் வரை அது கத்திக்கொண்டிருக்கும் என்பது உறுதி.

அது ஒரு பழைய மோட்டார் சைக்கிள். பள்ளியின் பிரதான புளிய மர நிழலில்தான் அதை நிறுத்திவைப்பார். ஒருபோதும் புளிய மர நிழலில் அவர் நிற்கமாட்டார். புளிய மர நிழல் அவருக்கு புளிக்கும் என்பார்.

Advertisement

இப்போது மாணவர்கள் இல்லாத அந்த வெறும் பாடசாலை என் கண் முன்னே விரிந்து கிடந்தது. அப்போதுதான் நான் ஒரு ஆசிரியனாக உருமாறினேன். பாலர் தொடக்கம் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும் மாணவ மாணவிகள் நிறைந்திருப்பதாக என் கண்களுக்குத் தோற்றியது. புளிய மர நிழலை சுவைத்தபடி நின்ற நான் உயர்தர வகுப்பை நோக்கி,

அந்த கடிகாரத்தையும் கையிலே எடுத்துக்கொண்டு சென்றேன். எனக்கு இருக்கும் நீண்ட மெல்லிய விரல்கள் போல் கடிகாரத்திற்கும் இருந்தன மூன்று விரல்கள். அந்த விரல்கள் மூன்றையும் அகல விரித்து நீட்டிக்கொண்டிருந்தது கடிகாரம்.

“தரம் 12” என்று எழுதி, பத்து இஞ்சிக்கு அப்பால் ஏற்றப்பட்டிருந்த கொங்ரீட் ஆணியில் அதை தொங்கவிட்டேன். அப்போதுதான் காற்றில் அந்த பிஸ்கோத்து வாசம் பரவி வந்தது.

பாலர் தொடங்கி தரம் ஐந்து வரை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அற்புத சுவை மிகு பிஸ்கோத்து. ஆளுக்கொரு ஜொக்குப்படி நிறைய நிறைய பகிருவாங்க.

“கா..கா…கா…” என்று கத்தியவாறு வகுப்பின் சுற்றுச்சுவரில் நின்றது உண்மையான காகம்தான். வரைந்த காகமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு நாள் வகுப்புத் தோழன் முஸ்தபா வெள்ளைக் காகம் ஒன்றைப் பிடித்து வந்து வகுப்புக்கே வெள்ளையடித்துவிட்டான். அந்த வெள்ளைக் காகத்தை நானும் ஒருமுறை தொட்டுப்பார்த்தேன்.

அங்கே இருக்கிற வகுப்புக் கரும்பலகையில் நான் எழுதிய கவிதையையும் “கா கா” என்றுதான் வாசித்தன சில கறுப்புக் காகங்கள். ஒரு மாணவி சொன்னாள் கவிதை வாசிக்கத் தெரியாது, பழக்கமில்லை என்றாள். அவளை விட அந்த “கா கா” எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

எனக்கு எப்போதுமே அந்த தரம் 12தான் பிடிக்கும். அங்குதான் பாடகன், பாடகியெல்லாம் இருக்கிறார்கள். மேசையில் ரகசியக் குறியீடுகள், வார்த்தைகள் எல்லாம் எழுதியிருக்கும். பெயாரன் லவ்லி கிறீம் வாசம் வரும். புளியங்காயை கடித்து பாதியைத் தருவாள் ஒருத்தி. அவள் தந்த கணத்திலிருந்து அது இனிக்கும்.

Advertisement

எனது அடுத்த பாடவேளைக்கான மணி ஒலித்தது. மனமே இல்லாமல் அந்த 12ம் வகுப்பு ஆசிரியர் இருக்கையை விட்டு எழுந்தேன். அன்று என் நாடு போலவே வகுப்பறையும் அடிக்கடி அமைதி இழந்து விட்டிருந்தது. வகுப்பில் மயங்கி விழுந்த ஒரு மாணவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றார்கள். வெளியே ஓடித்திரியும் மாணவர்களில் ஒருவனை “ஏய்..இங்க வா..உன்ட வகுப்பு எது? என்ன பாடம்?” என்று கூப்பிட்டு கேட்டேன். “கணிதப் பாடம் சேர்” என்றான்.

“சரி வகுப்புக்கு போ வாரன்” என்று சொல்லிவிட்டு கையில் ஒரு புத்தகத்துடன் நடக்கத் தொடங்கினேன். அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் நீண்டு கிடக்கும் கடற்கரை மணல் கலைத்த வழியால் நடந்தேன்.

வலமும், இடமும் இருக்கிற பூ மரங்களும் என்னை வேகமாக நடக்க விடுவதாயில்லை. எனக்கு விலாவால் சுகாதாரப் பாட ஆசிரியரும் நடந்து சென்றார். அவர் எந்த அல்லுச் செல்லும் இல்லாதவர் போன்றே நடந்தார்.

பள்ளி நூலகத்திற்கு முன்னால் ஒரு குள்ளமான மா மரம். சுற்றிவர இடுப்பு மட்டத்திற்கு கிடுகினால் மறைக்கப்பட்டிருந்தது. ஏழாம் வகுப்பில் இருக்கும் உமைஸ் என்ற குள்ளமான மாணவனின் நினைவாக என்னவோ அவன் வகுப்பிற்கு முன்னால் அது வளர்ந்தும் வளராமலும் நிற்கிறது. அதன் அருகில்.

கசக்கி எறியப்பட்ட நிலையில் ஒரு தாள். உள்ளே ரகசியம் இருக்கும் என்று நம்பவைத்தபடி கிடந்தது. குப்பைகளுக்கெல்லாம் ராஜா போல் கசங்கி, பந்து மாதிரிக் கிடந்த தாளை எடுத்து பிரித்தேன். “மூண்டக்கண்ணி”என்று எழுதியிருந்தது.

அதைப் பார்ப்பதற்காக என் கண்களும் பிதுங்கின. “ண்”க்கு இருந்த மூன்று சுழியின் அகலத்தைப் பார்த்ததும் எனக்கு அந்த மூண்டக் கண்ணியின் முகம் மனதில் பதிந்துவிட்டது. கண் என்பதும் ஒரு ரகசியம்தான் என்பதை அப்போது ஒப்புக்கொண்டேன்.

“மாணவர்களே கண் எத்தனை வகைப்படும்” என்று சத்தமாக கேட்டேன்.

“இந்த வகுப்பில் ஒரு வகை கண் இருக்கு மற்ற வகை தெரியாது சேர்” என்றான் ஒருவன் எழும்பி.

Advertisement

நான் கதிரையை விட்டு எழுந்திருப்பது குறைவு. என் ட்ரௌசர் (trousers) இடுப்பை விட சற்று பெரியது. நடக்கும்போது மட்டும் உயர்த்தி விடவேண்டும். அவரும் நடக்கும்போது தனது ட்ரௌசரை (trousers) உயர்த்திவிடுவார் என்பதால் இது ஒரு பொருட்டாகவே எனக்குத் தோன்றவில்லை.

அவரென்றால் விவசாய மாஸ்டர். பக்கத்து வகுப்பில் ட்ரௌசருக்கு கண் இல்லை என்றும், கண் இருக்கும் இடத்தில் ஊசியை குத்தி வந்திருக்கிறான் என்றும் ஒரு மாணவனுக்கு மூலத்தில் பிரம்பால் அடிக்கிறார் ஒரு சேர்.

அவர் இஸ்லாம் பாடம் எடுக்கிறார். என் கண் முன்னேதான் இது நடந்தது. ட்ரௌசரைத் தைத்தவன் செய்த பிழைக்கு அதை அணிந்தவன் தண்டிக்கப்படுகிறான். என்ன ஒலகமடா என்று பெருமூச்சை விட்டேன்.

ஐந்தாம் வகுப்புச் சுற்றுச்சுவரில் என் கவிதையை வாசிக்காமல் மௌனமாக, சொண்டில் பிஸ்கோத் துண்டை வைத்துக்கொண்டு நின்ற மூன்று காகங்களும் உண்மையான கறுப்பு நிறமாய் இருந்தது. தலையை அங்கிட்டும், இங்கிட்டும் ஆட்டி நாட்டுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றி சொன்னது.

காகங்களின் மௌனத்தைக் கலைத்தது அடுத்த பாட வேளைக்கான மணி ஓசை. “கதைக்கிற ஆக்கள்ட பேர எழுது” என்று ஒரு கட்டளையைப் பிறப்பித்துவிட்டு சபூர் மாமாவின் கென்டின் பக்கமாக நடையை விட்டேன். சிகரட்டும் கையுமாக நின்ற ஏ.எல். வகுப்பு மாணவனொருவன் மாயமாய் மறைந்தான்.

அருகில் படர்ந்திருந்த தொட்டாச் சிணுங்கியில் அவன் கால்பட்டுச் சிணுங்கிக் கிடந்தது. இறால் வடையை கைக்குள் பொத்திக்கொண்டு ஒருத்தி விரைந்து சென்றாள். டீச்சருக்கு வெண்கட்டியால் மீசை வைத்திருப்பது தெரியாமல் கென்டினுக்குள் இருந்து தேநீர் குடித்துச் சிரிக்கிறா. இங்கிலீசு டீச்சர் அவதான். கென்டினுக்குப் போன நான் இடையில் திரும்பிட்டேன்.

அப்போது என் கண்ணையே நம்ப முடியாதவாறு அது நடந்தது. அந்த ஐந்தாம் வகுப்பு கரும்பலகைக்குள்ளிருந்து காகங்கள் வெளியேறி பறந்து செல்வதுபோல் இருந்ததால் அந்த வகுப்பிற்கு வேகமாக நடந்து சென்றேன்.

அங்கு அப்படி ஒரு அற்புதமும் நடக்கவில்லை. வகுப்புக்கள் கலைக்கப்பட்டு மாணவர்கள் வீடு போய்விட்டதற்கான அடையாளங்கள் இறந்து கிடந்தன. காகங்கள் மட்டும் கூடிக் கும்மாளம் அடித்தன.

Advertisement

இப்படித்தான் ஒரு நாள் பாடசாலை கலைந்து வீடு செல்லும் வழியில் ரோட்டோரமாக கிடந்த பெரிய போஸ்டர் ஒன்றைக் கண்டு எடுத்துப் பிரித்துப் பார்த்து ஒரு கணம் நானும் ஏமாந்துபோய்விட்டேன். ’22’ இஞ்சி பெரிய கலர் டிவியின் படம் அதில் இருந்தது. ’30’ இஞ்சாவது இருக்கும் அந்த போஸ்டர். டிவிக்குள் வோஸிங் பவுடர் விளம்பரம் போய்க்கொண்டிருக்கும்போது (push) பண்ணிவிட்டாற்போல் ஒரு படம் இருந்தது. விடுவேனா வீட்டிற்கு எடுத்துச்சென்றேன்.

என் வாப்பாவிற்கு வீட்டில் ஒரு டிவி வாங்கி வைக்கும் அளவுக்கு சம்பாத்தியம் இல்லை. புழக்கடைக்குள் இருக்கும் மண்வெட்டியே மூத்தாப்பா காலத்தில் உபயோகித்தது. அந்த மண் வெட்டியைத்தான் காணிக்குள்ளயும் வரம்புகட்ட எடுத்துக்கொண்டு போவார். அதுக்கு வேற கொள்ளிச் சிராய் தேடி ஆப்பு வைக்கனும். இந்த சீலம் இருக்கும்போது டீவியா? எங்கிருந்து வர்றது.

வீடு சென்றதும் முதல் வேலையாக டிவியை சுவரில் ஒட்ட ஆரம்பித்தேன். ஒட்டும் பணியில் இருந்த எனக்கு ஒத்தாசையாக தங்கச்சியும் இருந்தாள். அவள் டிவியைப் பார்த்ததும் முகத்தில் புரண்டது ஒரு சந்தோசம். உண்மையிலே அது புது டிவிதான் என்று நினைத்துவிட்டாளோ என்னவோ.

திண்ணையில் சக்கச் சளிய கிடந்து வடக்குப் பக்கம் பார்த்து இருந்தாள். அவள் இருக்கும் பக்கமாகவே சுவரில் டிவியை வைத்தேன். நான்கு பக்கமும் பசை நாடாவை இழுத்து ஒட்டினாள் உம்மா. ஆசையாக பலகாரம் சுட்டுக்கேட்டால் சுட்டுத்தருவாள். ஓட்டுக் கொழுக்கட்டை சுட்டுக்கேட்டால் அதையும் சுட்டுத்தருவாள். எங்கள் ஆசையை முற்றாகப் புரிந்தவள் உம்மாதான்.

டிவியை விட்டு தள்ளிக் கிடந்த மேசையை, அதுவும் ஒரு கால் லொடக்கு லொடக்கு என கொஞ்சம் ஆடும். உம்மாவுடன் சேர்ந்து தூக்கி டிவியோடு சுவரைத் தொட்டாற்போல் போட்டுவிட்டதும் மேசைமீது ஒரு டிவி இருப்பது போலவே இருந்தது.

திண்ணையில் இருந்தவள் கொஞ்சம் கழுத்தை உயர்த்தி டிவியில் இருக்கும் வொஸிங் பவுடர் விளம்பர படத்தை பார்க்கத் தொடங்கினாள். என் கண்கள் சற்று கலங்கிவிட்டன. துள்ளிச் சென்று அவள் கன்னதில் ஒரு முத்தம் இட்டேன். இந்த கூத்தைப் பார்த்த உம்மா வாய்க்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். டி.வி கொஞ்சம் சரிந்தாற்போல் இருந்தது. இருந்தாலும் கீழே விழாது என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது.

அந்த நம்பிக்கை நினைவோடு நடந்தேன். அடுத்த வகுப்பிலிருந்த கரும்பலகையில் இருந்து திரும்பவும் காகங்கள் வெளியேறிப் பறப்பதுபோல இருந்தது. அப்போதுதான் எனக்குள் அந்த பயம் துளிர்விட்டது. பயம் துளிர்விட்ட கையோடு என் முதுகில் யாரோ கையை வைத்தாற்போல் இருந்தது சத்தமாக கத்திக்கொண்டு திரும்பினேன். வெறும் பள்ளிக்கூடம் ஓவென்று கிடந்தது. அங்கே தூரத்தில் ஒரு நாய் ஒற்றைக் காலைக் கிளப்பி மூத்திரம் அடித்துக்கொண்டிருந்தது.

அந்தப் புளிய மர நிழலை நான் சென்றடைந்தேனா? இல்லை அந்த நிழல் என்னை வந்தடைந்ததா? ஒன்றும் புரியவில்லை. அந்த புளிய மர நிழலில் நிற்கிறேன். இங்கு எப்படி வந்தேன் என்று புரியவில்லை. போன கிழமைதான் இந்த ஸ்கூல் வாச்சர் மௌத்தானதாக சொன்னாங்க. வந்ததே ஒரு பயம்.

Advertisement

நான் ஆசிரியனாக இருந்த நினைப்பும், வகுப்பு வகுப்பாக சென்று பாடம் சொல்லிக்கொடுத்த பைத்திய நினைப்பு எல்லாம் என்னை விட்டுப் பறந்து அந்தக் காகங்களுடன் போயின. புளிய மரத்தடியில் போட்டிருந்த புத்தக பேக்கை கையில் பிடித்துக்கொண்டு நிமிரும்போது மேலிருந்து ஒரு புளியம் பழமும் கீழே விழுந்தது. அதைக்கூட எடுக்காமல் சுவர் ஏறிக் குதித்து வீடு போய்ச் சேரும்போது உம்மா கொய்யாக்கம்போடு வரவேற்க காத்திருந்தாள்.

அந்த வரவேற்பு எனக்கு வலிக்கவேயில்லை. பூ ஒத்தினாள் அல்லது அடித்தாள். நானோ ஆகாவரி போகாவரியன் போல் நின்றுகொண்டேன்.

“நீ என்னடா சேர் மாருக்கெல்லாம் பெரிய சேர் மாதிரி நாலு மணிக்கு பள்ளி கலஞ்சி வார. நீ அங்க என்ன வாச்சர் வேலயா பாக்கிற”

“இல்லம்மா. என்ற கால் என்ன முயல்ட காலா” என்று சமாளித்தேன்.

“உன்ர கால் ஆமட கால் அதப் போய் கழுவிட்டு வா” என்றாள் பாசமாக.

அடுத்த நாள் என் வகுப்புக்கு நான்தான் முதலில் வந்து சேர்ந்தேன். பள்ளியும் வீடும் எங்கே என்று நான் மறந்தாலும் என் கால்கள் அதை மறக்கவே மாட்டாது.

காலை பத்து முப்பது மணிக்கு அது நிகழும். பிஸ்கோத்து பகிரும் நிகழ்வு. எங்களோடு படிக்காத காகங்களும் நிகழ்வுக்கு சமுகம் தரும். பாதிப் பாதி பிஸ்கோத்துகளாக உடைத்து வகுப்புச் சுவரில் வரிசையாக நின்றிருந்த எல்லாக் காகங்களுக்கும் வீசினேன்.

“டக்” என்ற சத்தம் வர சிறகுகள் படபட என பறந்தன. மாஜிதாவும் பாதியை வீசினாள். அப்போதும் “டக்” என்றது. அந்த சத்தத்தை வகுப்பில் சிலர்தான் விரும்பிக்கேட்போம். இலங்கை வானொலியில் ஒலிக்கும் நீங்கள் கேட்டவை போல.

Advertisement

“கறுத்தான் புறுத்தான் வேலிக்குள்ள பொறுத்தான்” என்றான் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து.

அதற்குப் பிறகு நடந்தது இதுதான். ஒரு துண்டையேனும் கீழே விடாமல் பிடித்து தின்று கொண்டிருந்தது அந்தக் காகம். அதன் முகம் மட்டும் அங்கு வந்த காகங்களுக்குள் வேறுபட்டு கொஞ்சம் சாம்பல் பூசி அலங்கரித்த அழகுடன் இருந்தது.

அந்தக் காகத்தை சரியாக குறி பார்த்து அதே சுவர் வழியாக பதுங்கி வந்த அந்த ஒல்லியான ஆசிரியர் பாய்ந்து வாலைப் பிடித்து வேகமாக சுற்றி வகுப்புக்குள்ளே ஓடிவந்து கரும்பலகையில் வீசி எறிந்துவிட்டார்.

“சப்” என்ற சத்தம் மட்டும் கேட்டது. பிறகு ரத்தம் கரும்பலகையில் பீச்சி அடிக்கவில்லை. கீழே விழுந்து சிறகை சில நிமிங்கள் அசைத்துவிட்டு நேற்று வாசித்த என் கவிதையை கடைசித் தரம் கம்மிய குரலில் வாசித்துவிட்டு இறந்தது. அப்போது என் ஈரல் குலையே அறுந்தாற்போல் உணர்ந்தேன்.

செத்துக் கிடந்த காகத்தை கக்கூஸிக்குப் பின்னால் கொண்டுபோய் போடச் சொன்னார் அந்த ஒல்லி. நானும் கிலூர் ரகுமானும் காகத்தைத் தூக்கிக் கொண்டுபோனோம். வழியில் நான் அதன் சாம்பல் முகத்தை விரலால் தடவித் தடவிப்போனேன். அந்த இடத்தில் சிறட்டையால் மடு தோண்டி அடக்கம் செய்துவிட்டு திரும்பிப் போக மனமில்லாமல் ஒரு துஆ ஓதிவிட்டு தலை மாட்டிலும், கால் மாட்டிலும் சின்னக் கம்புத்துண்டை குத்திவைத்தோம், குப்பையில் கிடந்த கரித்துண்டை எடுத்து பக்கத்துச் சுவரில்.

காகம் – பிறப்பு :- தெரியாது

இறப்பு :- 1990.02.05 என்று எழுதினேன். பிறகு வகுப்புக்குள் வந்து பார்த்தால் சுவரில் இருந்த கரும்பலகை காணாமல் போயிருந்தது. அது எங்கள் வகுப்பறையில்லை. ஆசிரியர்மார் ஓய்வு எடுக்கும் அறை என்பது; அட்டணக்கால் போட்டு ஒரு ஆசிரியர் இருப்பதைக் கண்டதும்தான் இருவருக்கும் வெளித்தது.

*

Advertisement
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Jey IT Solutions - A London Based Web Agency

Advertisement

ஜோதிடம்

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

24-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

23-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

22-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள்....

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

21-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

20-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

19-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள்...

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM
ஜோதிடம்5 மாதங்கள் ago

18-12-2022 இன்றைய ராசி பலன்

மேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை...

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock