அரசியல்
மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு இன்றோடு 100 நாட்கள்!!
இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கோரியும், ஊழல், மோசடிகளுக்கு எதிராகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளை வலியுறுத்தியும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்துக்கு இன்றுடன் 100 நாட்கள்.
இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி – ‘கோ ஹோம் கோட்டா’ என்ற முழக்கத்தோடு 2022 ஏப்ரல் 9 ஆம் திகதி மக்கள் எழுச்சிப் போராட்டம் ஆரம்பமானது.
ஊரடங்கு சட்டம், அவசரகால சட்டம் என்பன அமுலில் இருந்தபோதும்கூட அன்றைய தினம் இளைஞர், யுவதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் காலி முகத்திடலில் அணிதிரண்டனர். வன்முறையை கையில் எடுக்காமல் – அறவழியில் போராடி தமது இலக்கை அடைவதற்கு உறுதிபூண்டனர்.
காலி முகத்திடல் வளாகத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயில் சுற்றிவளைக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் வீடுகளுக்கு செல்லாமல், காலி முகத்திடலில் கூடாரம் அமைத்து, அங்கேயே தங்கியிருந்து அன்பாலும் – அஹிம்சை வழியிலும் களமாடினர். இரவு – பகலாக 24 மணிநேரமும் போராட்டம் தொடர்ந்தது.
மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறு மேற்கொள்ளும் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு, நாளுக்கு நாள் பேராதரவு பெருகியது. வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் நேசக்கரம் நீட்டினர்.
இந்நிலையில் போராட்ட பூமிக்கு ‘கோட்டா கோகம’ என பெயர்சூட்டப்பட்டது. மருந்தகம், வாசிகசாலை, சட்ட ஆலோசனைப்பிரிவு, மக்கள் முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு என அத்தனை அம்சங்களும் அந்த கோட்டாகோகமவில் ஸ்தாபிக்கப்பட்டன. அதன்பின்னர் அதன் கிளைகள் காலி, கண்டியில் உதயமாகின. வெளிநாடுகளில்கூட ‘கோட்டாகோகம’ அமைக்கப்பட்டது. நூதன முறைகளை கையாண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதால் அனைத்துலக சமூகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.
மறுபுறத்தில் பிரதமர் மஹிந்தவை பதவி விலக வைப்பதற்காக அலரிமாளிகை வளாகத்தில் ‘மைனா கோகம’வும் மலர்ந்தது.
மக்களின் இந்த அறவழிப்போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் பேராதரவை வழங்கின.
இந்த அறவழிப்போராட்டத்தால் கோட்டா அரசுக்கு அழுந்தங்கள் குவிந்தன. பிரதமர் பதவி விலகி, சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என மகாநாயக்க தேரர்கள்கூட கூட்டறிக்கை வெளியிட்டனர். சங்க பிரகடனங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதனால் மே – 09 ஆம் திகதி மஹிந்த பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களும், அவர்களின் சகாக்களும் கொழும்பு வந்து, வன்முறையைக் கையில் எடுத்து போராட்டக்காரர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். கூடாரங்களை எல்லாம் அடித்து நொறுக்கி தீயிட்டுக்கொளுத்தினர்.
இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அலரிமாளிகை வந்த அரச விசுவாசிகளுக்கு பதிலடி கொடுத்தனர். நாட்டில் வன்முறை வெடித்தது. அரசியல் வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன. ஆளுங்கட்சி எம்.பியொருவர் உட்பட வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். ( வன்முறை எதற்கும் தீர்வாகாது – வன்முறையை தவிர்ப்போம்) வன்முறைகளுக்கு மத்தியில் மஹிந்த பதவி துறந்தார்.
ரணிலை பிரதமராக்கி புதிய அமைச்சர்களுடன் மீண்டும் மொட்டு கட்சி அரசமைக்க நடவடிக்கை எடுத்தார் கோட்டா. சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.
ஆனாலும் போராட்டக்காரர்ள் ஓயவில்லை. கோட்டா பதவி விலகும்வரை போராடும் என திட்டவட்டமாக இடித்துரைத்தனர். இதனால் அரசியல் குழப்பம் நீடித்தது. பொருளாதார நெருக்கடியால் விலைகளும் எகிறின. வரிசைகளும் நீண்டன. கடும் எதிர்ப்பை கோட்டா அரசு சந்திக்க நேரிட்டது.
ஜுன் 09 ஆம் திகதி பஸில் ராஜபக்ச, எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். அரசமைப்பு மறுசீரமைப்பு ஊடாக இரட்டை குடியுரிமை உடையவர்கள் எம்.பி. பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனை வருமென்பதால் முன்கூட்டியே பதவி விலகி வெளியேறினார் பஸில். அந்த இடத்துக்கு தம்மிக்க பெரேரா தெரிவானார்.
போராட்டத்தை ஒடுக்குவதற்கு – தடுத்து நிறுத்துவதற்கு பல அணுகுமுறைகள் கையாளப்பட்டன. அவை வெற்றியளிக்கவில்லை .
ஜனாதிபதி கோட்டாவை விரட்ட, ஜுலை 9 ஆம் திகதி மக்கள் வெள்ளம் கொழும்பில் திரண்டது. மக்கள் எழுச்சி உச்சம் தொட்டது. ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது. மாளிகையை விட்டு ஓட வேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது.
தலைமறைவு வாழ்வுக்கு மத்தியில் 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டா. 14 ஆம் திகதி இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதன்மூலம் ‘கோ ஹோம் கோட்டா’ என்ற மக்கள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
பதில் ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றார். எனினும், அவரும் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கை. அதற்கான அழுத்தத்தை பிரயோகித்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களின் பணி 90 வீதம் நிறைவடைந்துவிட்டது இனி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளில்தான் முடிவு. அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியில் தீர்வு காண்பதே ஏற்புடைய நடவடிக்கை. அதுவே மக்கள் போராட்டத்துக்கு உயரிய கௌரவத்தை வழங்கும்.
ஆனால் மக்கள் எழுச்சிமூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகள் பாடம் கற்றிருந்தால், புதிய ஜனாதிபதியை பொது இணக்கப்பாட்டுடன் தெரிவுசெய்து , சர்வக்கட்சி அரசுக்காக விட்டுக்கொடுப்புகளை செய்திருப்பார்கள். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியே மேலோங்கியுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகயுடன் மக்கள் எழுச்சி போராட்டம் நிறைவுபெறுமா அல்லது அது தொடருமா என்பதை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பே நிர்ணயிக்கும்.
தமக்கான அதிகாரப் பசிக்கு ‘அரசியல் தீணி’யை தேடாமல், மக்களின் பசி போக்க தீர்வை தேட அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
மாறாக மூவேளை உணவின்றி மக்கள் பட்டினியால் வாடுகையில், அதற்கு தீர்வு தேடாமல், தமது அரசியல் அதிகார பசியை தீர்த்துக்கொள்ள பாடுபடும் தலைவர்கள் வாழும் நாட்டில், மக்களின் தலைவிதி எப்படிதான் மாறும்? நெருக்கடியிலிருந்து நாடு எவ்வாறுமான் மீளும்? என்ற வினாவுக்கு இடமளித்துவிட வேண்டாம். அது இருண்ட பக்கங்களுக்கே வழிகளை திறந்துவிடும்.
(அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை மீளப்பெறுவதற்கும், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் சிறந்த நாடாளுமன்றக் கட்டமைப்பு அவசியம். நாடாளுமன்றமே சட்டம் இயற்றும் சபை. எனவே, 20 ஆம் திகதிக்கு பிறகும் நிலையற்ற நாடாளுமன்ற முறைமை உருவாகினால் – கஷ்டத்துக்கு மத்தியிலேனும் நாடாளுமன்றத்தைக் கலைத்து – தேர்தலுக்கு செல்வதே சிறந்த வழி)
#SriLankaNews
You must be logged in to post a comment Login