அரசியல்
கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு – நாளை தீர்க்கமான சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் நாளை (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று (27) அறிவித்தார்.
இது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு வருமாறு, ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆளுங்கட்சி மற்றும் சுயாதீன அணிகளுடன் முதற்கட்டமாக பேச்சு நடத்திய பின்னர், பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கவே ஜனாதிபதி உத்தேசித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகும்வரை, சர்வக்கட்சி அரசு என்ற கட்டமைப்பை ஏற்கமுடியாது என சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன அறிவித்துவிட்டன. இவ்விரு விடயங்களும் இடம்பெறும்வரை, சர்வக்கட்சி அரசுக்கு தாமும் தயாரில்லை என ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று கலந்துரையாடலில் பங்கேற்பதா அல்லது எத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 11 கட்சிகளின் கூட்டணியும், அநுரபிரயதர்சன யாப்பா தலைமையிலான சுயாதீன அணியும் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இன்று மாலை கூடி ஆராய்ந்தன.
அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்காவிட்டால், சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என சுதந்திரக்கட்சியினர் தெரியப்படுத்தியுள்ளனர். கட்சியின் மத்திய குழுவும் இந்த முடிவை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். எனினும், சுதந்திரக்கட்சி கட்டாயம் பங்கேற்க வேண்டுமென 10 கட்சிகள் விடுத்த அழைப்பையேற்று, முடிவை மாற்றி, சந்திப்பில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🛑நம்பிக்கையில்லாப் பிரேரணை
இதற்கிடையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 03 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு தேவையான பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேபோல ஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைப்பது சம்பந்தமாக பரீசிலிக்கப்படுகின்றது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினால், ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியாது என்ற போதிலும், ஜனாதிபதிக்கான ஒதுக்கீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதில் ‘நடைமுறை சிக்கல்’ இருப்பதால்தான், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
🛑 மஹிந்த மந்திராலோசனை
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று அபயராம விகாரைக்கு வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, குறித்த விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் முக்கியத்துவமிக்க பேச்சில் ஈடுபட்டுள்ளார். தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் இதன்போது தேரருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக தயார் என்ற போதிலும், ஒரு தரப்பே அவரை அந்த முடிவை எடுக்க விடாமல் தடுப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லலித் எல்லாவல பரபரப்பு தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்காக பிரதமருக்கு இந்த தியாகத்தை செய்வதற்கு இடமளிக்காவிட்டால், தாம் உள்ளிட்ட 10 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாற்று நடவடிக்கையில் உறுதி என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சாதாரண பெரும்பான்மையை இழந்துள்ள அரசு, நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வருவதற்கு முன்னர் ஏதேனுமொரு அரசியல் முடிவை எடுக்கவே முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஆளுங்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டுள்ளதை நாமல் ராஜபக்சவும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார்.
“ தற்போதைய சூழ்நிலையில் முதலில் நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை தேடலாம். இது குறித்து அரசியல் கட்சிகள் சிந்திப்பதாக தெரியவில்லை.
கோட்டா கோ ஹோம் என ஒரு புறத்தில் போராட்டம் நடக்கின்றது, எதிர்க்கட்சி பாத யாத்திரை செல்கின்றது. ஆளுங்கட்சியினர் பிளவுபட்டு 113 என்ற எண்கணித அரசியலில் ஈடுபடுகின்றனர். இவற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீரபோவதில்லை.” எனவும் நாமல் பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற இன்றைய சந்திப்புகூட இறுதி முடிவு எட்டப்படாமலேயே நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்கும், சர்வக்கட்சி அரசொன்றே அவசியம் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் நீள்கின்றது.
ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு பேராதரவு கிட்டியுள்ளது. வர்த்தக சங்கங்கள்கூட கடைகளை அடைத்து, ஆதரவை வெளிப்படுத்தின. இந்த போராட்டம் ஊடாக வழங்கப்பட்ட செய்தியை – கோரிக்கையை ஏற்று, ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும், அவ்வாறு இல்லாவிட்டால், 06 ஆம் திகதி முதல் தொடர் போராட்டம் வெடிக்கும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆர்.சனத்
#SriLanka #Artical
You must be logged in to post a comment Login