கட்டுரை
கொரோனா எனும் கொடிய வரலாறு – தேவதர்சன் சுகிந்தன்
உலகம் தனது நீண்ட நெடிய வரலாற்றில் பல்வேறு அபாயங்களை எதிர்கொண்டுள்ளது. இயற்கை அனர்த்தங்கள், உலகப்போர்கள், நோய்த் தொற்றுக்கள் என அவற்றை வரிசைப்படுத்தலாம்.
ஒவ்வொரு அபாயமும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. ஒவ்வொரு அபாயமும் உலகின் போக்கை மாற்றியிருக்கின்றது. ஒவ்வொரு அபாயத்துக்கு பின்னரும் உலகம் புதிய உருக்கொண்டு எழுந்திருக்கிறது.
இந்த வரிசையில் 21ம் நூற்றாண்டு எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய அபாயமாக பதிவாகியிருப்பது ஓர் தொற்றுநோய். அந்த தொற்றுநோய்க்கு பெயர் கொரோனா.
2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச செய்தி நிறுவனங்கள் ஊடாக ஓர் தகவல் மெதுவாக பரவ ஆரம்பிக்கிறது. சீனாவில் இனம் தெரியாத ஓர் காய்ச்சல் பரவி வருவதாகவும். குறித்த காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவர்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் அந்த செய்திகள் சாரப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து குறித்த காய்ச்சல் ஓர் வைரஸ் காரணமாகவே பரவுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், அவை தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவ ஆரம்பித்தன.
இவ்வாறு பரவ ஆரம்பித்த இனம் தெரியாத வைரசுக்கு கொரோனா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் போது, அவ் வைரஸ் சீனர்களை தாண்டி வேற்று நாட்டவர்களையும் பாதிக்க ஆரம்பித்திருந்தது.
கொரோனா வைரஸ் ஆர்என்ஏ வைரஸ் குடும்பத்தின் ஓர் வைரஸ் பிரிவு என்பதும், குறித்த வைரஸ் மிருகங்கள் மற்றும் பறவைகளுக்கு எளிதாக பரவக்கூடிய ஓர் வைரஸ் என்பதும் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்தமை உறுதிப்படுத்தப்பட்டமையின் பின்னர் அவ் வைரஸ் பரவியமைக்கான பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் முதன்மையாக சொல்லப்பட்ட காரணம் சீனர்களின் உணவுப்பழக்கம்.
சீனர்கள் ஏனையவர்களால் பெருமளவில் உட்கொள்ளப்படாத காட்டு விலங்குகளையும் பறவைகளையும் அதிகளவில் உட்கொள்வதாகவும், சீனாவின் வுஹான் பகுதியில் அமைந்துள்ள ஓர் சந்தையில் அவ்வாறான பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இவ்வாறான வழமைக்கு மாறான உணவுப்பழக்கம் மூலமே கொரோனா வைரஸ் கடத்தப்பதாகவும் பல செய்திகள் பரப்பப்பட்டன.
சீனர்கள் பொதுவாகவே தமது நாட்டின் மீது தனித்துவமான அக்கறை கொண்டவர்கள். உலகின் பலம் பொருந்திய தம்மை நிலைநிறுத்திக்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இணையாக தம்மை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக சீனர்களும் அந் நாட்டு அரசாங்கமும் மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் உலகத்தின் கண்களில் இருந்து மறைத்துவிட முடியாதவை.
சர்வதேச ரீதியாக பயன்படுத்தப்படும் பெருமளவான சமூக வலைத்தளங்களை தனது கட்டுப்பாட்டு பிராந்தியத்துக்குள் பயன்படுத்த சீனா அனுமதி மறுத்து வந்துள்ளமை உட்பட்ட பல விடயங்களும் இவ்வாறான பின்னணியில் தான் என்பது வெளிப்படை.
இவ்வாறான பின்னணியில் தனது நாட்டுக்குள் இவ்வளவு மோசமான வைரஸ் பரவ எவ்விதத்தில் சீனா அனுமதித்தது என்பது வல்லுநர்களின் கேள்வியாக இருந்தபோதும் கூட உலகின் முதல் நிலை சனத்தொகையினைக் கொண்ட ஓர் நாட்டில் இவ்வாறான சமூகத் தொற்று அபாயங்கள் சகஜமானவையே என்பது ஓரளவுக்கு ஆறுதலான பதிலாகவும் அமைந்தது. ஆனால் சீனா தொடர்பான சர்வதேசத்தின் இப் பார்வை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை.
சீனாவின் போக்கு மீண்டும் சந்தேகங்களை வலுப்பெற செய்தது. ஏறக்குறைய 2020ம் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் சீனாவின் நிலை முற்றிலுமாக மாறுபட ஆரம்பித்தது. தொற்று எண்ணிக்கை இறப்பு வீதம் என்பன படிப்படியாக குறைவடைய ஆரம்பித்திருந்த அதேவேளை இக் காலப்பகுதியில் கொரோனா வைரஸின் தாக்கம் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் முதல் நிலை நாடுகளில் நிலை கொண்டிருந்தது.
இத்தாலியில் தினமும் ஐநூறு தொடக்கம் ஏறக்குறைய 950 வரையில் மக்கள் மரணிக்க ஆரம்பித்திருந்த நாட்களில் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தொற்றுக்கு ஆளாக ஆரம்பித்திருந்தனர்.
இத்தாலியில் குறிப்பாக மார்ச் மாத காலப்பகுதி மிகவும் நெருக்கடியான காலப்பகுதியாக பதிவாகியது. அதன் அடிப்படையில் இத்தாலியில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மரணமாக மார்ச் மாதம் 21ம் திகதி 921 மரணம் பதிவாகியுள்ளதுடன், அதே நாளில் 6554 பேர் தொற்றுக்குள்ளானமை இதுவரையில் பதிவாகியுள்ள அதிகபட்ச தொற்றாக காணப்படுகிறது.
எந்த நாடுகளும் அயல் நாடுகளுக்கு உதவி செய்ய முடியாத அளவிலான கையறு நிலை சூழ்ந்த காலப்பகுதியில் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தனர்.
இவ்வாறு இத்தாலி கொரோனா வைரஸின் பாதிப்புகளை எண்ணிக்கொண்டிருந்த அதே காலப்பகுதியிலேயே அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட பல மாகாணங்களில் கொரோனா தனது கைவரிசையினைக் காட்ட ஆரம்பித்திருந்தது.
உலகின் மிகப் பலம் பொருந்திய நாடாக பல வழிகளிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்ற விமர்சனம் சர்வதேச அரசியல் அரங்கில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பொதுவாக முடக்கங்கள் அறிவிக்கப்பட்டு, நாட்டின் களியாட்ட விடுதிகள், மதுபானக் கடைகள், மசாஜ் நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டாலும், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில் அமெரிக்கா பாரிய கொரோனா நெருக்கடியினை எதிர்கொண்டிருந்த காலப்பகுதியில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்திருந்த அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸை சைனீஸ் வைரஸ் என விளித்தமையானது பாரிய சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.அத்தோடு நிற்காத ட்ரம்ப் சீனா கொரோனா வைரஸை திட்டமிட்டே பரப்பியது எனவும்.
வுஹான் நகரில் உள்ள ஓர் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இருந்தே இந்த வைரஸ் பரப்பப்பட்டு வந்தது எனவும் ஓர் சர்ச்சையினை தோற்றுவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தனது உயர்மட்டக் குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய டொனால்ட் ட்ரம்ப் சீன மீதான தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்.
உண்மையிலேயே அவ்வாறான ஓர் சந்தேகம் உலகின் பல நாடுகளுக்கும் இருக்கத்தான் செய்தன.
அந்த சந்தேகங்களுக்கு தீனி போடுவது போல உலக நாடுகள் எங்கும் கொரோனா வைரஸ் தனது கைவரிசையினைக் காட்டி பல்லாயிரக் கணக்கானவர்களை பலியெடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் ஏறக்குறைய கொரோனா முடிவுக்கு வந்தது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மக்களுக்கான வாழ்வாதாரம், போதிய மருத்துவம், வைத்தியசாலை வசதிகள் என உலகின் பல நாடுகள் போராடிக்கொண்டிருந்த காலப்பகுதியில் சீனாவில் தொற்றுக்கள் நிறைவுக்கு வந்து மக்கள் மீண்டும் தமது பழைய வாழ்க்கையினை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தனர்.
மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களும் களியாட்ட விடுதிகளும் திறக்கப்பட்டன. பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் வழமைபோலவே இயங்க ஆரம்பித்தன. இவையெல்லாம் ஏனைய நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு சீனா மீது இருந்த கோபத்தை மேலும் திரிதூண்டிவிட்டன.
ஏனைய நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் அந்நாட்டினுடைய உட்கட்சிகளுக்கிடையிலான அல்லது அந் நாடுகளின் அரசாங்கம் மற்றும் மக்களுக்கிடையிலான விமர்சனங்களாக மாறிப்போக அமெரிக்காவில் அது வேறு ஓர் சிக்கலாக உருவெடுத்தது.
ஆம்! அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான புதிய தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், குறித்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்ப்பில் அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஆகியோரும் போட்டியிட தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அமெரிக்க மக்களை காப்பாற்ற டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளத் தவறிய முயற்சிகள் அவரது இரண்டாம் கட்ட வெற்றிக் கனவை பாதிக்கும் என அப்போதே எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில் குறித்த எதிர்வுகூறல்கள் பலித்து டொனால்ட் ட்ரம்ப் குறித்த தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.
எனினும் அதன்பின்னர் பதவிக்கு வந்த ஜோ பைடன் குறித்த நெருக்கடிகளை ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருந்தாலும், தற்போது வரை கொரோனாவின் அச்சுறுத்தல்கள் நீண்டுகொண்டே இருக்கின்றன.
இலங்கை, இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் தொடர்ச்சியாக தனது கைவரிசையை காட்டிவரும் கொரோனா நெருக்கடியை கட்டுப்படுத்த இன்றுவரை அரசாங்கங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேவேளை அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியபோதும் இப்போது மீண்டும் அங்கு அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகளில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை 2021ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் கொரோனா தனது அடுத்த கட்ட அபாய நிலையினை வெளிப்படுத்தியது. ஒமிக்ரோன் என்ற கொரோனா வைரஸின் புதியவகை திரிபானது உலகின் செல்வந்த நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் மீண்டும் அச்சத்துக்கு உள்ளாக்கியது.
இந்த திரிவு தென்னாபிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட அதேவேளை ஏற்கனவே பரவிய டெல்டா திரிபினைக் காட்டிலும் அதிக பரவல் அபாயம் கொண்டது என தெரிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இறங்கின.
அதன்படி அபாய வலயமாக கண்டறிப்பட்ட ஏனைய நாடுகளுடன் விமான போக்குவரத்து, சுற்றுலா பயணிகள் நுழைவு, விளையாட்டு கலாசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கின்றமை போன்ற செயற்பாடுகளுக்கு பல நாடுகள் தடை விதித்தன.
இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
உலகின் பல நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனால் உலகில் கணிசமான மக்கள் தொகையினர் அவற்றை செலுத்தியுள்ள போதும் நீளும் வைரஸ் நெருக்கடி விரைவில் உலகை விட்டு அகலும் என நம்புவோம்.
#Artical
You must be logged in to post a comment Login