கட்டுரை
‘அன்று வடக்கு இன்று தெற்கு’! – ‘அடக்குமுறை -அணுகுமுறை’!
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்தில் அறவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்கூட திட்டமிட்ட அடிப்படையில் ஒடுக்கப்பட்டன.
முதலில் அரச அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும். அதற்கு மக்கள், போராட்டக்காரர்கள் அடிபணியாத பட்சத்தில் – சட்ட ரீதியிலான நகர்வுகள் முன்னெடுக்கப்படும். இதனால் தமிழர்களுக்கு போராடும் உரிமையைக்கூட போராடியே பெறவேண்டிய நிலைமை நீடித்தது – இன்றளவிலும் நீடிக்கின்றது.
குறிப்பாக போரில் உயிரிழந்த தனது மகனை பொதுவெளியில் நினைவுகூர்ந்து ஒரு துளி கண்ணீர் சிந்தும் உரிமைகூட தாய்க்கு மறுக்கப்படும் அவலமே நீடிக்கின்றது.
வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஒன்று புலி முத்திரை குத்தப்படும். இல்லையேல் தேசிய பாதுகாப்பு காரணம் காட்டப்படும். தமிழ் தாயகத்தில் அவ்வாறு நடைபெறும்போது தென்னிலங்கையிலுள்ள தேசிய கட்சிகள் அதற்கு எதிராக குரல் கொடுக்காது – களத்தில் இறங்கி போராடாது. மாறாக சமாளிப்புக்கு கண்டன அறிக்கை மட்டுமே விடப்படும்.
அன்று தமிழர்களின் காலை சுற்றிய ‘அடக்குமுறை’ என்ற பாம்பு இன்று தென்னிலங்கையிலுள்ள தேசிய கட்சிகளையும் சுற்ற ஆரம்பித்துள்ளது. தற்போதுதான் ‘அடக்குமுறை’ என்ற பாம்பின் விசத்தன்மை எவ்வளவு கொடியது என்பதை அக்கட்சிகள் உணர ஆரம்பித்துள்ளன.
இலங்கையில் காவல்துறை சுயாதீனமாகவே செயற்படுகின்றது என சொல்லப்பட்டாலும் ஆட்சியாளர்களின் கட்டளையை செயற்படும் கட்டமைப்பாகவே அது இன்றளவிலும் செயற்படுகின்றது என்பதே கசப்பான உண்மையாகும். அதனால்தான் ஆட்சியாளர்களின் தேவை காவல்துறை ஊடாக நிறைவேற்றப்படும் ஜனநாயக விரோத நகர்வும் நீடிக்கின்றது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று இன்றுடன் இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இந்த நாளில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது.
இந்த ஆட்சியின்கீழ் கடந்த இரு ஆண்டுகளில் விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது, பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது, கல்வித்துறையும் நாசமாக்கப்பட்டுள்ளது என்பன உட்பட மேலும் சில சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு அவற்றுக்கு எதிராகவே கொழும்பு, ஹைட் பார்கில் குறித்த எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களை களமிறக்கவே ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
நாட்டு மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பு அலை உருவாகியுள்ள நிலையில், இப்படியொரு போராட்டம் நடந்தால் அது மேலும் தலையிடியாக அமையும் என ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். அடக்குமுறையைக் கையாண்டால் அது மேலும் ஆப்பாக அமைந்துவிடும் என்பதால் கொரோனா நிலைமையை பயன்படுத்த அரசு எத்தனித்துள்ளது. போராட்டத்தை தடுக்க பொலிஸார் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என எதிரணிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
அதாவது, ஐக்கிய மக்கள் சக்தி நாளை நடத்தவுள்ள போராட்டத்தை தடுக்குமாறு கோரி பொலிஸார் சில மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் கோரிக்கை விடுத்தனர். அவற்றுள் பெரும்பாலான நீதிமன்றங்களால் இக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நீதிமன்றங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை அடிப்படையாகக்கொண்டே பொலிஸார் தடை உத்தரவு பெற முற்பட்டுள்ளனர். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் , சுகாதார நடைமுறைகளை மீறினால், தற்போது நடைமுறையிலுள்ள சட்டத்தின் பிரகாரம் பொலிஸாரால் செயற்பட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொட்டு கட்சி மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி உண்டெனில் எதற்காக மக்கள் போராட்டத்துக்கு இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
போராட்டத்தை ஒடுக்குவதை விடுத்து, போராட்டத்துக்கு வழிவகுத்த விடயங்களுக்கு தீர்வை வழங்க அரசு முற்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட வெளியிடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டால் ஏற்படும் தாக்கத்தை இனியாவது தென்னிலங்கையிலுள்ள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login