இலங்கை
சர்வதேச விசாரணைக்கு மாத்திரம் இரண்டாம் தரப்பு
சர்வதேச விசாரணைக்கு மாத்திரம் இரண்டாம் தரப்பு
ஜேர்மனிய நாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ‘நாங்கள் என்ன இரண்டாம் தரப்பினரா (செகன்ட் கிளாஸ்) என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆத்திரமடைந்து பதிலளித்திருந்தார்.
ஆனால் ஐ.எம்.எப் மற்றும் சர்வதேசங்களிடம் இலங்கையின் அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டு தலைவர்கள் கடன்களை பெற்றுக்கொள்ளும் போது நாம் இரண்டாம் தரப்பினர் என்பதை மறந்து போனார்களா?
ஒரு நாட்டின் மனித உரிமை மீறல்களுக்கும், உயிர்பலிகளுக்கும் சர்வதேசமட்டத்தில் இருந்து பல்வேறு குரல்கள் தொடர்ச்சியாக எழும் நேரத்தில், சர்வதேச விசாரணைக்கு தயார் இல்லை என்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது?
கடும்போக்கு அரசியல் என்றா? அல்லது பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் நழுவுவது என்றா?
ஏன் இந்த நிலைப்பாடு தொடர்கிறது. ஒவ்வொரு தலைமைத்துவமும் விசாரணையை ஏன் புறக்கணிக்கிறது?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜேர்மனிய ஊடக கருத்துக்களை மேற்கோள்காட்டி பல்வேறு கருத்துக்கள் அரசியல் தரப்புக்களில் வெளிவந்தவண்ணமுள்ளன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ரணிலுக்கு ஆதரவாய் குரல் கொடுத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரைக்கு நேற்று(04.10.2023) சென்றிருந்த மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு காலமும் இலங்கையை அதிரவைத்த சனல் – 4 காணொளி தொடர்பிலும் அதன் நோக்கமான சர்வதேச விசாரணை தொடர்பிலும் எவ்வித ஆணித்தனமான கருத்துக்களையும் வெளிவிட மறுத்த மகிந்த ராஜபக்ச இப்போது குரல் கொடுக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவின் மறுப்புக்கு ஆதரவாக ”சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆட வேண்டியதில்லை” என்றும் மேற்குலக ஊடகங்களுக்கு கடுந்தொனியில் பேசியதனை வரவேற்கின்றேன்” தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் நாட்டிற்கு ஆதரவாக ஒலித்த மகிந்தவின் குரலா? அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒலித்த மகிந்தவின் குரலா? என்பதில் சந்தேகம் எழுகிறது.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒரு உரையில் எழுப்பிய கேள்வி இலங்கை அரசியல் போக்கை சிந்திக்க தூண்டுகிறது.
”யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவற்கும், தமிழர்களை கொன்று குவிப்பதற்கும் உலக நாடுகளிடம் நிதி மற்றும் ஆயுதம் பெற கையேந்தும்போது நாம் இரண்டாம் தரப்ப்பாக நாம் இருந்துள்ளோம் என்பதை என் ஜனாதிபதி நினைவில் கொள்ளவில்லை.
நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினை என்ன? பிரச்சினையின் ஆணி வேர் என்ன? என்பதை அரச தலைவர்கள் ஆராயாமல் இருக்கும் வரை இந்த நாடு எவ்வாறு முன்னேற்றமடையும்.
வங்குரோத்து நிலைக்கு மத்தியிலும் இனவாத செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை.
கௌதம சித்தார்த்தனின் போதனைகளை பறைசாற்ற வேண்டிய பௌத்த பிக்குகள் இனவாதத்தை பறைசாற்றி ஆவேசமாக செயற்படுகிறார்கள். இனவாதத்தை முன்னிலைப்படுத்திக்கொண்டு செயற்பட்டால் எவர் ஆதரவு வழங்குவார்?
இந்த நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தமிழர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளித்து நீதியான தீர்வை வழங்கினால் சர்வதேசத்தில் சாதிக்கும் தமிழர்கள் பொருளாதார முன்னேற்றத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என சிறீதரனின் உரையாற்றியிருந்தார்.
சர்வதேச விசாரணையை ஆதரிக்காத அரசாங்கம், எவ்வாறான தீர்வை எம் மக்களுக்கு பெற்றுத்தரப்போகிறது?
கருப்பு முத்திரைகளாக சர்வதேச மட்டத்தில் இடம்பிடித்த யுத்தக்குற்றங்களும், மனிதஉரிமை மீறல்களும் தொடர்ந்தும் மூடிமறைக்கப்படுவதால் தீர்வு என்ற விடயமும் இலங்கை அரசியலில் முக்கியத்துவ இன்றி போகிறது.
எனினும் தற்போது ரணிலுக்கு ஆதரவாக வெளிவந்துள்ள மகிந்தவின் குரல் ”ரணில் – ராஜபக்ச ” என்ற அரசியல் நாமத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.