அரசியல்
இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி!!
இந்திய அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும் இடையிலான கலந்துரையாடல் புது டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு முயற்சிகளுக்காக இந்திய வெளியுறவுத்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் குறிப்பாக,
கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான இணைப்பை அபிவிருத்தி செய்தல், திருகோணமலை கைத்தொழில் பூங்காவில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி வாழும் 15,000 குடும்பங்களுக்கு இந்திய மானியத்தில் சோலார் பேனல்களை ஒதுக்கீடு செய்தல் மற்றும் பெண்கள் தலைமைதாங்கும் 15,0000 குடும்பங்களுக்கு உதவி வழங்குதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மேம்படுத்துதல்
இதுமட்டுமன்றி கோனாஸ்வரம் கோவிலை அபிவிருத்தி செய்தல், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய இலங்கை அகதிகளுக்கான வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள், கிழக்கு மாகாணம் மற்றும் தோட்டப் பகுதிகளில் கணினி மற்றும் விஞ்ஞான ஆய்வகத்துடன் கூடிய பாடசாலைகளை மேம்படுத்துதல், சிறிய நோயாளர் காவு வண்டி மூலம் தோட்டத் துறைக்கு சேவையாற்றுதல், மற்றும் மலையகத்தில் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இந்த கலந்துரையாடல் இரு நாட்டு நட்புறவுகளை மேலும் மேம்படுத்தும் எனவும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பங்களிப்புகளை இந்தியா வழங்கவுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login