இலங்கை
எரிபொருள் பற்றாக்குறையால் யாழில் பேருந்து சேவை தடங்கல்!
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாக பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.
பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயை தேவைக்கேற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்கு சீரான சேவையை வழங்கவேண்டும். அதை விடுத்து, கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும் உதிரிப்பாகங்களை அதிக விலைக்கு பெற்று சீர்செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த விடயத்தில் யாழ். அரசாங்க அதிபர் கவனம் எடுத்து பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login