இலங்கை
இலங்கைக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்ளவுள்ள எலோன் மஸ்க்கின் பிரதிநிதி
இலங்கைக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்ளவுள்ள எலோன் மஸ்க்கின் பிரதிநிதி
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில் தமது செயற்கைக்கோள் செயற்திட்டத்தை இலங்கையில் செயல்படுவதற்கு தேவையான உரிமத்தை பெறுவதற்கான இறுதிக் கட்டங்களை முடிவுறுத்தும் வகையில் அவர் மீண்டும் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளார்.
புதுடெல்லியை தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் பிரதிநிதி ஒருவரே இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தநிலையில் இறுதிக்கட்டப்பணிகளுக்காக அவர்,அடுத்த வாரத்தில் மீண்டும் வருவார் என்று ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்
முன்னதாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இது எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு நாட்டில் செயல்பாடுகளுக்கான உரிமத்தைப் பெற வழி வகுத்தது.
ஆரம்பத்தில் மார்ச் 2024 இல் உரிமத்திற்கு விண்ணப்பித்த போதிலும், சுதந்திரமான சேவை வழங்குநர்களுக்கு இடமளிப்பதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பு இலங்கையில் இல்லாததால் ஸ்டார்லிங் தடைகளை எதிர்கொண்டதாக ருவான் விஜேயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.