கட்டுரை
அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் – அ.நிக்ஸன்
அக்கியூஸ் ஒப்பந்தமும் புதுடில்லியும் –
இலங்கையைக் கையாளத் தவறியதன் விளைவா?
மூன்று நாடுகளும் இணைந்து கைச்சாத்திட்ட அக்கியூஸ் (Aukus) என்ற இந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்சியென பிபிசி செய்திச்சேவை கூறுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரின் கூட்டு மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் இந்த ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்களில் இந்தியாவுக்கு அழைப்பு இல்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்று நாடுகளுக்கு இடையேயான மிக முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடாக அக்கியூஸ் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளதாக அமெரிக்காவின் பாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்துள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா தலைமையிலான குவாட் (The Spirit of QUAD) அமைப்பின் மாநாடு நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள நிலையில் புதன்கிழமை இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற இராணுவத்தால் பயன்படுத்தப்படும் அனைத்து அமெரிக்க தயாரிப்புகளுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளும் திறனை அதிகரிக்கிறது.
2020 ஆம் ஆண்டு பீகா எனப்படும் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (Basic Exchange and Cooperation Agreement- BECA) இது அமெரிக்கப் பாதுகாப்புத்துறை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புவிசார்-புலனாய்வு முகாமைக்கு இடையிலான ஒப்பந்தமாகும்.
ஆகவே இந்த மூன்று ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பின்னரான பாகிஸ்தானை மையப்படுத்திய தலிபான்களின் செயற்பாடுகள் மற்றும் சீனாவைப் பிரதானப்படுத்தியுள்ள இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களை அமெரிக்கா இந்தியாவோடு இணைந்து முன்னெடுத்து வருகின்றமை பட்டவர்த்தனம்.
பீகா ஒப்பந்தம்
பீகா எனப்படும் ஒப்பந்தம் இந்திய ஏவுகணைகள் மற்றும் அத்தகைய தரவு தேவைப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களின் துல்லியத்தை அதிகரிக்கவும் இடமளிப்பதால், இந்தியாவில் இந்தே ட்ரோன் தாக்குதல்களை தலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் மீது நடத்த அமெரிக்கா ஏற்பாடு செய்கிறது.
இது தொடர்பாக அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்துப் பேசியிமிருக்கின்றனர்.
ஆகவேதான் இந்தியா அமெரிக்காவின் இராணுவ வியூகத்திற்குள் சென்றுவிட்டதெனக் கருத இடமுண்டு. ஏனெனில் எந்த நேரத்திலும் இந்தியப் படைத் தளங்கள், இந்தியத் துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடிய முறையிலான ஏற்பாடுகளுக்கு மோடி அரசாங்கம் வழிசமைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகளை விலக்குவதென டொனால்ட் ட்ரம்ப் 2015 ஆம் ஆண்டே முடிவு செய்ததன் பின்னணில், மேற்படி மூன்று ஒப்பந்தங்களும் இந்தியாவுடன் செய்யப்பட்டிருக்கலாம் என்று யாரும் கருதினால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஏனெனில் பூகோள அரசியல் ரீதியான இராணுவத் தீர்மானங்களை அமெரிக்கா ஒருபோதும் திடீரென மேற்கொள்வதில்லை.
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கும் திட்டம் என்பது சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் நோக்கமாக இருந்தாலும், படை விலகலின் பின்னரான பக்கவிளைவுகள் எப்படி அமையும் என்ற எதிர்வு கூறலையும் அமெரிக்கா 2015 ஆம் ஆண்டில் இருந்தே கணிப்பீடு செய்திருக்கும்.
அதன் பின்னணியில் இந்தியாவோடு 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்ட பீகா எனப்படும் மூன்றாவது ஒப்பந்தம் அமைந்திருக்கலாம்.
ஆகவே இதன் சாதக பாதக விளைவுகளை இந்தியாவே தீர்மானிக்க வேண்டும். பாகிஸ்தான் மூலமாக தலிபான்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையலாமென முன்னாள் அமெரிக்கத் தூதுவர் நிக்கி கோலி விடுத்த எச்சரிக்கைகூட புதுடில்லியை மேலும் அமெரிக்க பக்கம் சாய வைக்கும் தந்திரோபாயம் என்பதில் சந்தேகமேயில்லை.
அல்லது அக்கியூஸ் ஒப்பந்தத்தால் ஆத்திரமடைந்துள்ள பிரான்ஸ் நாட்டோடு உரையாடி தனது ஆதங்கத்தையும் இந்தியா வெளிப்படுத்துமா? அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் உள்ள தனது தூதுவர்களை பிரான்ஸ் அழைத்து அக்கியூஸ் உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து உரையாடுவது போன்று இந்தியாவும் தமது தூதுவர்களை அழைத்து உரையாடுமா?
அல்லது சீனாவின் எதிரிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள புதுடில்லி முயற்சிக்குமா அல்லது ஆப்கானிஸ்தான் விவகாரத்துக்குப் பின்னரான அமெரிக்க- சீனப் பனிப்போரில், இந்தியா தனக்கெனத் தனியான சுயமரியாதைக் கட்டமைப்பு ஒன்றை வகுத்துக்கொள்ளுமா என்ற கேள்விகளும் உண்டு.
அமெரிக்கத் தந்திரோபயம்
ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்த உறுப்புரிமை இல்லாத நிலையிலும், கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்க அனுமதிக்கப்பட்டமைகூட அமெரிக்கத் தந்திரோபயமே என்பது கண்கூடு.
ஏனெனில் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் தனது மேலான்மையை உறுதிப்படுத்தி இராணுவ மற்றும் பொருளாதார நலன்களைப் பலப்படுத்த வேண்டுமென்ற அமெரிக்கச் சிந்தனைக்கு இந்தியா அவசியம் தேவைப்படுகின்றது.
இதற்காகவே தலிபான்களை பாகிஸ்தான் பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தலாமென்ற அமெரிக்க எச்சரிக்கையும், இந்தியாவில் இருந்தே ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிடும் உத்தியும் வகுக்கப்பட்டுள்ளது எனக் கூறலாம். ஆகவே அமெரிக்க நலனுக்காகவே இந்தியா பயன்படுத்தப்படுகின்றது.
மாறாக சீன- இந்திய மோதலைத் தடுக்கவோ அல்லது இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைவிட இந்தியாவைப் பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கிலோ அல்ல. இதனை அக்கியூஸ் ஒப்பந்தம் வெளிப்படுத்துகின்றது.
ஆனால் இந்தோ- பசுபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில்கூட இந்தியா ஆதிக்கம் செலுத்தியிருக்கக்கூடிய புவிசார் அரசியல் போக்கு 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான சூழலில் தாராளமாகவே இருந்தது. அப்போது ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டதை்தை இல்லாமல் செய்யும் நோக்கில் இலங்கையும் இந்தியாவை நம்பியிருந்தது.
பாகிஸ்தானை வெட்டிய அமெரிக்கா
2009 இன் பின்னரான சூழலில் இந்தியாவைக் கடந்து அமெரிக்காவுடன் சமாந்தரமாக உறவைப் பேண வேண்டுமென்ற சிந்தனையை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா எவ்வாறு இடமளித்ததோ, அதேபோன்றதொரு அந்தஸ்தை இந்தியாவைக் கடந்து பாகிஸ்தானுக்கும் அமெரிக்க வழங்கக்கூடிய வாய்ப்புண்டு. ஏற்கனவே பாகிஸ்தானைக் கூட்டாளி நாடென அமெரிக்க 2004 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.
சீனாவோடு நெருக்கம் அதிகரித்ததால் பாகிஸ்தானுடனான கூட்டாளி உறவை அமெரிக்கா பின்னர் துண்டித்துக்கொண்டது. ஆனாலும் அவ்வாறு துண்டிக்கப்பட்டமை குறித்து காங்கிரஸில் அமெரிக்கா இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
குவாட் அமைப்பிற்குள் சேர்ந்து செயற்படுவதற்குரிய தகுதி இலங்கை இராணுவத்துக்கு இல்லை.
ஆனாலும் ஒத்துழைப்பது குறித்த இணக்கப்பாடுகளை அமெரிக்கா இலங்கையோடு பேசி வருகின்றது.
You must be logged in to post a comment Login